சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜ சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம்: எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசைக்கு இடம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜவின் சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜ தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், சட்டசபை தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் பாஜ சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 பேரவை தொகுதிகளுக்கு பாஜ சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 பேரவை தொகுதிகளுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வானதி சீனிவாசனும், கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜாவும், எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி.துரைசாமியும், தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளம், பழனி ஆகிய தொகுதிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: