சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக அடைய போகும் வரலாற்று வெற்றியை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. ‘பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது’ என தலைப்பிட்டு ஆங்கில பத்திரிகை கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கின்றனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்தி பிடிக்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளுக்காக, சமூக மேம்பாட்டிற்காக திராவிட மாடல் அரசு அக்கறையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. தங்களுக்காக உழைக்கின்ற, தங்களுக்காக திட்டங்களை உள்ளன்போடு, உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தும் திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். 45 சதவீதம் என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
