பிட்ஸ்

* மன்பிரீத்தை ஓரங்கட்ட ஹாக்கி இந்தியா முடிவு
புதுடெல்லி: கடந்த டிசம்பரில் இந்திய ஹாக்கி அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளில் ஆடியது. இப்போட்டிகளில் 0-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான மன்பிரீத், தில்பிரீத் சிங், கோல்கீப்பர் கிரிஷண் பகதூர் பதக் ஆகியோர் ஒழுக்கக் குறைவாக நடந்து கொண்டதாக புகார்கள் வந்தன. அது தொடர்பாக நடந்த விசாரணை அடிப்படையில், இந்த 3 வீரர்களையும், அடுத்து நடக்கவுள்ள எப்ஐஎச் புரோ லீக் தொடரில் ஓரங்கட்ட ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா, ராஜ்யசபா எம்பியாவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது கணவர் வி.சீனிவாசன் (67), கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சீனிவாசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சீனிவாசன் முன்னாள் கபடி வீரர் ஆவார். சிஐஎஸ்எப் ஆய்வாளராக அவர் பணியாற்றி உள்ளார். சீனிவாசன்-உஷா தம்பதிக்கு, டாக்டர் உஜ்வால் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.

* 49 பந்துகளில் 115 டிகாக் ரன் வேட்டை
செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரியன் நகரில் தென் ஆப்ரிக்கா – வெஸ்ட் இடையில் 2வது டி20 போட்டி நடந்தது. இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் குவின்டன் டிகாக் 49 பந்துகளில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றி உள்ளது.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு நிதான ஆட்டம்
சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் குரூப் ஏ பிரிவில், பரோடா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது நாளான நேற்று, தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன் எடுத்திருந்தது. ரஞ்சி கோப்பை எலைட் குரூப் ஏ பிரிவு போட்டியில் தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதி வருகின்றன. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா அணி 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதையடுத்து தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை துவக்கியது. தமிழ்நாடு அணியின் துவக்க வீரர்கள் ஆதிஷ் (42 ரன்), விமல் குமார் (66 ரன்) நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி ரன் சேர்த்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு விக்கெட் இழப்பின்றி 118 ரன் எடுத்திருந்தது.

Related Stories: