5வது டி20 போட்டியில் இன்று வெற்றி சிம்மாசனம் யாருக்கு? இந்தியா நியூசி மல்லுக்கட்டு

திருவனந்தபுரம்: இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் அட்டகாச வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய நியூசி ஆறுதல் வெற்றி பெற்றது. அதனால், இந்த தொடரில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது. 4வது டி20 போட்டியில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் கை கொடுக்காததால், பந்து வீச்சில் தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. தவிர, துவக்க வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவதால் டாப் ஆர்டரில் மாற்றங்கள் செய்யப்படலாம். டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் துவக்க வீரராக சஞ்சு சாம்சனை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், சமீப போட்டிகளில் சரிந்து வரும் அவரது ஃபார்ம் கவலை அளிப்பதாக உள்ளது.

அதேசமயம் அவரது சொந்த ஊரில் இன்றைய போட்டி நடப்பதால் பேட்டிங்கில் சாம்சன் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இன்றைய போட்டியில் இஷான் கிஷண், அக்சர் படேல் ஆகியோரின் ஆட்டம் அணி நிர்வாகத்தால் கவனிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இஷான் கிஷண் கருதப்படுகிறார். திருவனந்தபுரம் ஸ்டேடியம் பொதுவாக ரன் வேட்டையாட உகந்தது. இங்கு நடந்த 4 20 போட்டிகளில் இந்தியா 3ல் வென்றுள்ளது.

நியூசி அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிவாகை சூடியுள்ளது. எனவே, இந்தியாவை வெற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஓரளவு யூகித்திருப்பார். அந்த அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டிம் செபர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்று வருகிறார். இன்றைய போட்டியில் வெல்ல இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டுவர் என்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணி வீரர்கள்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷண், ரவி பிஷ்னோய்.

நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மிட்செல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேகப் டஃபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவோன் ஜேகப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, லாக்கி பெர்குசன்.
போட்டி துவங்கும் நேரம்: இரவு 7 மணி

Related Stories: