தரங்கம்பாடி, கொள்ளிடம் பகுதியில் குறுவை அறுவடை துவங்கியது கூலி தர முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு

தரங்கம்பாடி, ஜன.30: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை சாகுபடி அறுவடை தொடங்கியது. விளைச்சல் இல்லாமலும், அறுவடை கூலி கூட தரமுடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தரங்கம்பாடி பகுதியில் திருவிளையாட்டம், ஈச்சங்குடி, நரசிங்கநத்தம், கடலி, குமாரமங்கலம், கருப்பூர், கலசம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிது. விவசாயிகள் ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, கோ 50 உள்ளிட்ட 135 நாள் வயதுள்ள நெல்லை சாகுபடி செய்திருந்தனர். இதன் பின் நிவர்புயல், புரவிபுயல் காரணமாக கடும் மழை ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி கிடந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை விவசாயிகள் தற்பொழுது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மழையில் மூழ்கி கிடந்ததன் காரணமாக நெல்மணிகள் அதிகம் இல்லாமல் பெரும்பாலும் பதராக ஆகிவிட்டதால் கண்டு முதல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகையாவது முழுமையாக கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்:  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி சம்பா நெற்பயிர் 90 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி முளைத்து அழுகி பயனற்றதாகி விட்டது. இந்நிலையில் சில பகுதிகளில் அழுகி காய்ந்து போய் உள்ள நெற்பயிரை விவசாயிகள் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு வெறும் 4 அல்லது 5 மூட்டைகள் கிடைப்பதே மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. இருந்தும் வயலில் உள்ள குறைந்த அளவே உள்ள நெற்கதிரை வைக்கோலுடன் அறுவடை செய்யும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அறுவடை இயந்திர கூலியில் கால்பங்கு கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ 30,000 வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்யமுடியாமல்பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். மாணிக்கவாசல் கிராமத்தில் மட்டும் 800 ஏக்கர் சம்பா நெற்பயிர் எந்த பயனும் இன்றி அழுகி வீணாகி விட்டது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிவாரண தொகையை உயர்த்தியும், 100 சதவீத காப்பீட்டு தொகையை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: