3 மாவட்ட விவசாய பாசனத்துக்கு தண்ணீர் அமைச்சர் எ.வ.வேலு நாளை திறந்து வைக்கிறார் சாத்தனூர் அணையில் இருந்து

திருவண்ணாமலை, ஜன.30: சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மி.கன அடியில் தற்போது 7,186 மி.கன அடி இருப்பு உள்ளது. எனவே, அணையில் இருந்து நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு நாளை (31ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி அளவில் சாத்தனூர் அணையின் பிக்கப் டேம் பகுதியில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார். அதன் மூலம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய சாகுபடி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாத்தனூர் அணையில் தற்போது உள்ள நீரில், அணை பராமரிப்பு, மீன் வளர்ப்பு போன்ற தேவைக்காக 308 மி.க.அடிதேவைப்படுகிறது.

மேலும், திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர், புதுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 323 மி.க.அடி தேவைப்படும். அதோடு, மண் தூர்வினால் 300 மி.க.அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நீர் ஆவியாதல் காரணமாக 726 மி.க.அடி தண்ணீர் வீணாகும். எனவே, மீதமுள்ள தண்ணீர் விவசாய பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. எனவே, வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 220 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படும். நேரடி விவசாய பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், பின்சம்பா பருவ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: