திருவண்ணாமலை, ஜன. 29: திருவண்ணாமலையில் பெண்ணிடம் 3 சவரன் பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை முக்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி வசந்தா(58). இவர் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை கிருத்திகையொட்டி சுவாமி தரிசனம் செய்ய சென்றார். கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. பின்னர் தரிசனம் முடித்து வெளியே வந்தார். அப்போது, நெரிசலில் யாரோ மர்ம வாலிபர், வசந்தாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வசந்தா கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வசந்தா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், வாலிபரை தேடி வருகின்றனர்.
