தமிழ்நாட்டில் 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்!!

சென்னை : கருப்பை வாய் புற்றுநோயை தடுத்திடும் வகையில், தடுப்பூசி மாநிலம் முழுவதும் 3,38,649 பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. ஹெச்.பி.வி வைரஸ் (HPV – Human Papilloma Virus) தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்க இயலும்.

கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் HPV தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்தினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 30,209 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

Related Stories: