திடீரென பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்து

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் மதியம் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்த பேருந்து செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளி ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் அடித்தார். ஆனால் திடீரென பிரேக் பழுதான காரணமாக அந்த பேருந்து நிற்காமல் வேகமாகச் சென்றது. இதைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட டிரைவர், உடனே அந்த பேருந்தை சர்வீஸ் சாலையை ஒட்டியபடி இருந்த சாலையோரத் தடுப்பில் மோதி நிற்கச் செய்துள்ளார்.

டிரைவரின் சமயோஜித புத்தியால், அங்கு பெரும் விபத்து நடைபெறாமல் தடுக்கப்பட்டது. பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் சிறுகாயங்கள் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவத்தினால் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து, தடுப்பில் மோதி நின்ற அரசு பேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Related Stories: