தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த விருத்தாசலம் பெண்: தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி, சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக படித்து முடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது அமெரிக்காவில் உள்ள ஹீஸ்ட்டன் டெக்ஸாஸ் நகரில் புற்றுநோய் பிரிவில் சிறப்பு பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

இவர் அங்கு பணி செய்தபோது, தென் அமெரிக்கா ஈக்வடார் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஆண்ட்ரஸ் என்பவருடன் பழகி காதல் ஏற்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுக்கு விருத்தாசலத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. தமிழ் பெண் வந்தனாவை தென் அமெரிக்கா மாப்பிள்ளை ஆண்ட்ரஸ் தமிழர் பாரம்பரிய முறைப்படை மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.

மணமகன் ஆண்ட்ரஸின் பெற்றோர் வேஷ்டி, புடவை அணிந்து சடங்குகளை செய்தனர். மருத்துவர் வந்தனாவின் சகோதரர் வசந்தும் கடந்த 2018ல் இதே திருமண மண்டபத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பியா என்ற பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

* ஜெர்மன் நாட்டு காதலியை மணந்த தமிழக வாலிபர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் – விமலா தம்பதியின் மகன் கோகுலகிருஷ்ணன்(26). இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு துபாயில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் தாய்லாந்து சென்ற போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோபியா பெல்ஜிங்(21) என்பவரைச் சந்தித்து காதலித்துள்ளார்.

சோபியா பெல்ஜிங், தற்போது பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலமாக ஜெர்மனி கல்லூரியில் படித்தும் வருகிறார். இருவீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி சுப்பிரமணிய சுவாமி கோயில் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நேற்று காலை நடைபெற்றது.

Related Stories: