சிவகங்கை, ஜன.29: சிவகங்கை மாவட்டத்தில் நிலங்களை அளவை செய்ய, இ.சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்தனர். இந்நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இ.சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில், இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, இ.சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணைய வழிச்சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
