மருந்துக்கான பரிசோதனை விதியில் திருத்தம் மருந்து நிறுவனங்கள் இனி சோதனை உரிமம் பெறுவது அவசியம் இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மருந்து நிறுவனங்கள் இனி சோதனை உரிமத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகள் 2019ல் முக்கிய திருத்தங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒழுங்குமுறை சுமையை குறைத்து வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்கான பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி இந்த திருத்தம் அமைந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ், மருந்து நிறுவனங்கள் பரிசோதனை,ஆராய்ச்சி அல்லது பகுப்பாய்வு நோக்கங்களுக்காக சிறிய அளவிலான மருந்துகளை தயாரிப்பதற்கு ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (சிடிஎஸ்சிஓ) சோதனை உரிமத்தைப் பெற வேண்டும். தற்போதைய திருத்தங்கள் மூலம், வணிக ரீதியான உற்பத்திக்கான இந்த உரிமத்தை பெறுவதற்கு முன் கூட்டியே தெரிவிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக,மருந்துக்கு சோதனை உரிமத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை.மேலும் சைட்டோடாக்ஸிக் மருந்துகள்,போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள மருந்துகளின் வரையறுக்கப்பட்ட வகையைத் தவிர,சிடிஎஸ்ஓவிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் மருந்து மேம்பாட்டைத் தொடரலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தம் மூலம் மருந்து மேம்பாட்டுக்கான சுழற்சியில் 90 நாட்கள் மிச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: