புதுடெல்லி: தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ள நிலையில் , தேசிய அளவிலான கட்சிகள் தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பதில் மும்முரம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க சென்றுள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக துணை பொதுச்செயலாளருமான எம்.பி கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பானது சோனியா காந்தியின் வீட்டில் நடந்தது. அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை எப்படி சந்திப்பது, கூட்டணி விவகாரத்தில் என்னென்ன உள்ளன, தொகுதி பங்கீடு குறித்து எப்பொழுது இறுதி செய்யலாம் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் விதமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் இதைத் தவிர மேலும் கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக வேறு கட்சிகளை இணைப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
குறிப்பாக இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். கனிமொழி-ராகுல் காந்தி சந்திப்பை தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை விரைவில் இறுதி வடிவம் பெறும் என்பது உறுதியாகி உள்ளது.
