பாராமதி: மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித்பவார் உட்பட 5 பேர், பாராமதி அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித்பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் அஜித்பவார்(66). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித்பவார், மாநிலத்தின் துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஜில்லா பரிஷத் தேர்தலுக்காக புனே மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் அஜித்பவார் தலைமையில் பிரசாரம் நடைபெற இருந்தது. இதில் கலந்துக் கொள்வதற்காக நேற்று காலை அஜித்பவார், மும்பையில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டார். விமானம் மூலமாக புனே மாவட்டத்தில் உள்ள பாராமதிக்கு சென்று, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரசாரம் செய்ய இருந்தார். அஜித்பவார் சென்ற சிறிய ரக விமானம், டெல்லியைச் சேர்ந்த வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அந்த விமானத்தில் அஜித்பவார், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, விமான பணிப்பெண் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணித்தனர். காலை 8.10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், காலை 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. காலை 8.50 மணிக்கு பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, நிலைத்தன்மையை இழந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று பயங்கர சத்தத்துடன் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த அஜித்பவார் உட்பட 5 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தரவுகளின் படி, விமானம் 8.30 மணியளவில் பாராமதியை அடைந்துள்ளது. ஆனால் அடர்ந்த பனி மூட்டத்தால் முதல் முறை தரையிறங்கும் முயற்சியை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக 8.45 மணியளவில் தரையிறங்க முயன்ற போது தான், ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. தகவலறிந்து மீட்புக் குழுவினர் செல்வதற்குள் விமானம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமான விபத்து விசாரணைப் பணியகம் மற்றும் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை விசாரணையை தொடங்கி உள்ளன. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித்பவாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்பவாரின் அகால மரணத்தை ஏற்க முடியவில்லை என தெரிவித்த முதல்வர் பட்நவிஸ், தான் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ‘அஜித்பவாரின் மரணம் யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அரசாங்கத்தில் அவருடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றிய பிறகு, இப்போது அவர் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. மகாராஷ்டிராவை பற்றி நன்கு அறிந்தவர் அஜித்பவார். மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை பற்றி ஆழமான புரிதல் கொண்ட மக்கள் தலைவர். இது போன்ற ஒரு ஆளுமையை இனி உருவாக்க முடியாது’ என்று உருக்கமாக பேசினார்.
அஜித்பவாரின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும் விமான விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அஜித்பவார் அரசியலில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து பாஜ தலைமையிலான கூட்டணியில் இணைந்தாலும், தங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாக உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். இதே போல ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற மாநிலங்களின் முதல்வர்கள் அஜித்பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாராமதியில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, மோஹோலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடுவும் டெல்லியில் இருந்து புனே வந்தனர். அஜித்பவாரின் மரணச் செய்தி கேட்டு, அவரது குடும்பத்தினர் நிலைக்குலைந்து போயினர். மரணச் செய்தி அறிந்து மும்பையில் இருந்து சரத்பவார் ஓடோடி வந்தார். பாராமதி விமான நிலையத்திற்கும், விபத்து நடந்த இடத்திலிருந்து அஜித்பவாரின் உடல் கொண்டு செல்லப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கும் சென்றார். அங்கு அஜித்பவாரின் சடலத்தை பார்த்து சரத்பவார் கலங்கி நின்றார்.
சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார், அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார் உள்ளிட்டோரும் துக்கம் தாளாமல் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. அஜித்பவாரின் இறுதிச் சடங்கு, பாராமதியில் இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. காலை 11 மணியளவில் வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
* 3 நாள் துக்கம் அனுசரிப்பு
அஜித்பவாரின் மறைவை அடுத்து, ஜனவரி 28ம் தேதி (நேற்று) பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் வரும் 30ம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். துக்கக் காலத்தில் எந்தவிதமான அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* விபத்தில் உயிரிழந்தவர்கள்
1.அஜித் பவார் மகாராஷ்டிர துணை முதல்வர்
2.கேப்டன் சுமித் கபூர் விமானி
3.கேப்டன் ஷாம்பவி பதக் உதவி விமானி
4.விதிப் ஜாதவ் அஜித் பவாரின்
பாதுகாப்பு அதிகாரி
5.பிங்கி மாலி விமானப் பணிப்பெண்
* பிரதமர் மோடி இரங்கல் சரத் பவாருடன் பேசினார்
புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடி சரத் பவாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், அஜித்பவார் அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பு கொண்ட ஒரு மக்கள் தலைவர். அவரது மரணம் எதிர்பாராதது மற்றும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த சிலரும் கொடிய விமான விபத்தில் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த பேரழிவின் தாக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அஜித் பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோருக்கும், இந்த கொடூர விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* 2வது முறையாக விபத்தில் சிக்கிய ‘லியர்ஜெட் 45’ விமானம்
அஜித் பவார் பயணம் செய்த விமானம் 16 ஆண்டு பழமையான ஒரு பாம்ப்பார்டியர் லியர்ஜெட் 45. ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ரக விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி லியர்ஜெட் 45 எக்ஸ்ஆர் விமானம், மும்பையில் விபத்தில் சிக்கியது. கனமழை மற்றும் பாதை தெரியாததால் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி 2 பகுதிகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. விமானத்தில் பயணித்த 8 பேரும் காயங்களுடன் உயிர்தப்பினர்.
* விமானத்தின் கடைசி நிமிடங்கள்
விமானம் தரையில் மோதும் முன், விமானிகள் அதை நிலைப்படுத்த விமானி போராடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் தரையில் மோதிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான காட்சிகள், விமானத்தின் சிதைந்த பாகங்கள் புகை மற்றும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருப்பதைக் காட்டின. விமானத்தின் கருகிய பாகங்களும், சிதைந்த பகுதிகளும் விமான நிலையத்தின் தரை முழுவதும் சிதறிக் கிடந்தன. விமானம் ஓடுபாதையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது, ஆனால் ஓடுபாதையை அடைவதற்கு 100 அடிக்கு முன்பே கீழே விழுந்தது என நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். மேலும் பாராமதி விமான நிலையத்தில் விமானிகளை வழிநடத்துவதற்கான இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் இல்லை.
* பாராமதி விமான நிலையத்தில் உள்ள சவால்கள்
அஜித்பவார் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பாராமதி விமான நிலையத்தில், விமானங்களை தரையிறக்குவது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் விமான பயிற்சிக்காகவும், தனியார் விமான செயல்பாடுகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மோசமான வானிலையின் போது பாதை தெரியவில்லை என்றால், விமானிகளுக்கு வழிகாட்ட உதவும் கருவிகள் இங்கு இல்லை. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கொடுத்த தகவலின் படி, இங்கு விமான போக்குவரத்து காட்டுப்பாட்டு கோபுரம் (ஏடிஎஸ்) கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இங்கு விமான போக்குவரத்தை நிர்வகிக்க விமான நிறுவனங்கள் சார்பில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரி இருப்பார் என்றும் அவர்கள் கொடுக்கும் தகவல்களை வைத்தே விமானம் தரையிறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
* சித்தப்பாவுக்காக விட்டுக்கொடுத்த எம்பி பதவி
கடந்த 1991ல் முதன்முறையாக பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து அஜித்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் தனது சித்தப்பா சரத்பவாருக்காக பதவியை விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு சரத்பவார் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அதன்பிறகு தான் பாராமதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டப்ேபரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்பவாருக்காக பதவியை விட்டுக்கொடுத்த இவர்தான், அரசியல் சாணக்கியன் என புகழப்படும் சரத்பவாரிடம் இருந்து கட்சியையே கைப்பற்றி விட்டார்.
அஜித்பவாரின் அரசியல் பயணம்
* மகாராஷ்டிர அரசியலில் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர், அஜித் ஆனந்தராவ் பவார். 1959 ஜூலை 22ல் பிறந்தார். மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாகவும், ஜாம்பவானாகவும் திகழும் சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகன் தான் அஜித் பவார்.
* இவரது அரசியல் பயணம், 1991ல் பாராமதி தொகுதியில் தொடங்கியது. கடந்த 1995, 1999, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024ல் அவர் பெற்ற வெற்றிகள், மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டதை காட்டுகிறது.
* 1991 தொடங்கி மகாாராஷ்டிரா அரசில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். மாநில நிதி அமைச்சராக நீண்ட காாலம் பொறுப்பு வகித்தவர். தற்போது வரை நிதியமைச்சராக இருந்துள்ளார். நிதியை அவர் நிர்வகித்த விதம் கட்சி எல்லைகளைக் கடந்து அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது.
* 2023ம் ஆண்டு சரத்பவார் தலைமையிலானதேசிய வாத காங்கிரசை உடைத்துக் கொண்டு ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜ – சிவசேனா கூட்டணி அரசில் இணைந்து, துணை முதல்வரானார்.
