வடகலை, தென்கலை பிரச்னை விவகாரம் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் விசாரணை குழு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கு மட்டும் அனுமதி வழங்கி கடந்த 2022ம் ஆண்டு கோயில் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்கு பின்னர் வடகலை பிரிவினரும் அமர வேண்டும் என்றும், அதேப்போன்று, முதலில் தென்கலை பிரிவினர் அவர்களுக்கான பாடல்களை படிக்கவும், பின்னர் வடகலை பிரிவினர் ராமானுஜரின் பாடல்களை படிக்கவும், இதைத்தொடர்ந்து 2 பிரிவினரும் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் வடகலை மற்றும் தென்கலை இரு தரப்பிற்கும் இடையில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமிக்கிறோம். அவருக்கு தேவைப்பட்டால் இன்னும் 2 பேரை உறுப்பினராக நியமித்துக் கொள்ளலாம்.

குறிப்பாக ராமானுஜரின் சீடர்களிடையே இத்தகைய பிரச்னை மத மோதலாக உருவாவதை அனுமதிக்க கூடாது. சகோதரத்துவத்தை இந்த விவகாரத்தில் இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் தற்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும். மேலும் கோயிலுக்குள் காவல்துறையினர் கட்டாயம் நுழையக் கூடாது. அவ்வாறு நுழைந்தால் அது அமைதியை பாதுகாப்பதற்கு பதிலாக, அங்கிருக்கும் நிலைமையை மோசமான சூழலாக மாற்றிவிடும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: