மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் பலியான விமான விபத்தில் சதி உள்ளது எனவும், இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இவரது கருத்தை ஆதரித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், விசாரணை நடத்த வேண்டும் என தாங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து சம்பவத்தை வெறும் விபத்து என்று என கருத முடியாது என தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அஜித் பவாரின் மரணம் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.
அவர் ஆளும் கூட்டணியில் இருந்தார். ஆனால் அவர் பாஜ அணியில் இருந்து விலகுவார் என பல்வேறு கூற்றுக்கள் வெளிவந்தன. இத்தகைய சூழ்நிலையில், இந்த திடீர் விபத்து சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. எனவே இந்த சம்பவத்திற்குப் பின்னால் சதித்திட்டம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு தனிநபரின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை அல்லது நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த விபத்து ஏன் நடந்தது? இது விசாரிக்கப்பட வேண்டும். நாங்களும் விசாரணைக்கு கோரிக்கை விடுக்கிறோம்/ அஜித் பவார் மக்களுக்காக உழைத்தவர் என்றும், அவரது அகால மரணம் அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . இது அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் துயரப்படுத்தியுள்ளது.
நாங்கள் அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கிறோம். இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்களுக்கு மன வலிமை கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம், என்றார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்: அஜித் பவார் ஒரு பெரிய தலைவர், இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பதை அறிய ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
* ‘அரசியல் செய்யாதீர்கள்’
இது குறித்து ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு கூறுகையில், அஜித் பவாரின் குடும்பத்தினரும் அவருடன் தொடர்புடைய ஆதரவாளர்கள் உள்பட பலரும் துக்கத்தில் இருக்கும்போது, ‘அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது மற்றும் நியாயமற்றது. அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்க்கட்சியினர் இப்படி ஏதாவது சொல்ல விரும்பியிருந்தால், சில நாட்களுக்குப் பிறகு சொல்லியிருக்கலாம்.
இதுபோன்ற அசிங்கமான அரசியலில் ஈடுபடும் உங்கள் ஆசை திருப்தி அடையவில்லை என்றாலும், இறுதிச் சடங்குகளையும் சடங்குகளையும் செய்வதற்கு குடும்பத்திற்கு சில நாட்களாவது அவகாசம் அளித்திருக்கலாம். இன்றே இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் அற்பமான செயல், என்றார்.
* கட்சியின் நிலை என்ன?
2023ம் ஆண்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறி அஜித்பவார், ஷிண்ேட தலைமையிலான பாஜ – சிவசேனா கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானார். பின்னர் அவர்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ேதசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் என்ற கட்சியை தொடங்கினார்.
அஜித்பவார் விரைவில் சரத்பவாருடன் இணைவார் என்று எம்பி சஞ்சய் ராவத் உட்பட பலரும் தெரிவித்து வருகின்றனர். இதற்கேற்ப கடந்த மாநகராட்சி தேர்தல் தோல்வியால் பவார்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ேதர்தல் பிரசாரத்தில் பாஜவை நேரடியாகவே தாக்கியிருந்தார் அஜித்பவார். இந்நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் யார் பக்கம் செல்வார்கள். கட்சியின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
