அசுர வேகத்தில் ஏற்றம் கண்டது தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்ந்து புதிய உச்சம்: அதிர்ச்சியில் உறைந்த நகை பிரியர்கள்

சென்னை: அசுர வேகத்தில் தங்க விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ஒரு பவுனுக்கு ரூ.5200 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச நிச்சயமற்ற சூழலால் கடந்த ஆண்டு பங்குச்சந்தை பெரியளவில் லாபம் கொடுக்கவில்லை. இந்தாண்டும் கூட அதே நிலைமை தான் தொடர்கிறது. ஆனால், மறுபுறம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வேகமாக உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதோடு சேர்த்து அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகள் மற்றும் பலவீனமான டாலர் போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அந்த முடிவுகள்தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கம் விலை அசுர வேகத்தில் ஏறி வருகிறது. அதுவும் கடந்த 16ம் தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது.

தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 அதிகரித்து, வரலாற்றில் முதன்முறையாக ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுன் ரூ.1,20,200க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று (28ம் தேதி) காலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330க்கும், பவுனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,22,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக தங்கத்தின் விலை மீண்டும் மாலையில் எகிறியது. ஒரு கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610க்கும் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,24,880க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்ைத தொட்டுள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

* வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்தின் விலையைவிட வெள்ளி விலை வெகு வேகமாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்க விலையேற்ற சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளி விலையேற்ற சதவீதம் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் (27ம் தேதி) கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.387க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.13 உயர்ந்து முதன்முறையாக ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.400ஐ தாண்டியுள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செயயப்பட்டது.

10 நாட்கள் விலை நிலவரம்
ஜனவரி 27 ரூ.1,22,640
ஜனவரி 27 ரூ.1,19,680
ஜனவரி 26 ரூ.1,20,200
ஜனவரி 25 ரூ.1,18,000
ஜனவரி 24 ரூ.1,18,000
ஜனவரி 23 ரூ.1,16,400
ஜனவரி 22 ரூ.1,13,600
ஜனவரி 21 ரூ.1,15,320
ஜனவரி 20 ரூ.1,11,200
ஜனவரி 19 ரூ.1,07,600

Related Stories: