தங்கம் கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது பவுன் ரூ.1,20,200ஐ தொட்டு புதிய உச்சம்: வெள்ளியும் போட்டி போட்டு எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து, பவுன் ரூ.1,20,200 ஐ தொட்டு புதிய உச்சம் கண்டது. இதேபோல வெள்ளியும் போட்டி போட்டு எகிறியது. தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வருகிறது. மேலும் வழக்கத்துக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது ஒரு நாளில் காலை, மாலை என 2 தடவை இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை (25ம்தேதி) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,620க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,16,960க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3,55,000க்கும் விற்பனையானது. பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,750க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் கடந்த 25ம் தேதி காலை, மாலை என ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. அதேபோல, வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.3.65 லட்சத்துக்கும் விற்பனையானது. காலை, மாலை என வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்தது. இதன் மூலம் தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றமும் ஏற்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் கிடு,கிடுவென உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025க்கும், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,200க்கு விற்பனையானது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3.75 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: