*தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே தடிகல் பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஓசூர் வனச்சரகத்திற்குள் வந்து பல பிரிவுகளாக பிரிந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
மனித உயிர்சேதம், பயிர் சேதத்தை தடுக்க மாவட்ட வனத்துறை சார்பில் கர்நாடக மாநிலத்தையொட்டி தேவர்பெட்டா வனப்பகுதி முதல் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம் வனப்பகுதி வரை சுமார் 130 கி.மீ., தொலைவிற்கு கம்பிவேலி(வயர்ரோப் பென்ஸ்) அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதில் தேன்கனிக்கோட்டை அருகே சாத்தனக்கல், தடிகல், பசவனபள்ளி, தட்டசந்திரம், கோவிந்தப்பள்ளி, நார்பனட்டி, பேவநத்தம், பாலேகுளி வரை கம்பி வேலி அமைக்க பொக்லைன் கொண்டு வனத்தில் நிலம் சமன் செய்து வழி ஏற்படுத்தி வருகின்றனர்.
தடிகல் அருகே கடந்த 10 ஆண்டுக்கு முன்பு யானை தாண்டா அகழி வெட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதனை விடுத்து நடுகாட்டில் கம்பி வேலி அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பணிகளை தடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளதால் பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு வனத்துறை சார்பில் கம்பி வேலி(வயர்ரோப் பென்ஸ்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பசவனப்பள்ளி பகுதியில் ஏற்கனவே உள்ள அகழி வழியாக கொண்டு செல்லாமல் நடுகாட்டில் குறுக்கு வழியில் வயர்ரோப் பென்ஸ் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
அப்படி அமைத்தால் மீண்டும் யானைகள் எங்கள் கிராம பகுதியில் உள்ள காட்டில் தஞ்சமடைந்து பயிர்களை நாசம் செய்யும். கோடிக்கணக்கில் செலவுசெய்து வேலி அமைத்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் போய்விடும். எனவே, மாற்றுப்பாதையில் அமைக்கும் பணியை கைவிட்டு ஏற்கனவே உள்ள யானை தாண்டா அகழி வழியாக வயர்ரோப் வேலி அமைக்க வேண்டும் என்றனர்.
