தமிழக முதல்வர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் 14 வயது நிரம்பிய மாணவிகளுக்கு எச்பிவி தடுப்பூசி ெசலுத்தும் பணி

*மாவட்டத்திற்கு 16,464 டோஸ்கள் தருவிப்பு

தர்மபுரி : சென்னையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் எச்பிவி (ஹூமன் பாப்பிலோமோ வைரஸ்) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எச்பிவி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொண்ட பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தர்மபுரி திமுக எம்பி வக்கீல் ஆ.மணி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து 12 வகையான தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு (28.7 சதவீதம்) அடுத்த படியாக, கருப்பை வாய் புற்றுநோய் (14 சதவீதம்) கண்டறியப்பட்டு வருகிறது.எச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை எச்பிவி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் 99.7 சதவீதம் தடுக்க இயலும்.

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டு 14.3.2025 அன்று நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பு எண் 100ல் கருப்பை வாய் புற்று நோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிட, எச்பிவி தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கென 2025-2026ம் ஆண்டில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும்\” என அறிவிக்கப்பட்டது. 2025-2026ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் தொடர்ச்சியாக தடுப்பூசி திட்டத்தினை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்டம் மூலம், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட நோய் நிகழ்வு விகித ஆய்வில், ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களில் 16 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டதில், அதிக நோய் நிகழ்வு விகிதம் கொண்ட முதல் நான்கு மாவட்டங்கள் தேர்ந்தெடுத்து, அவற்றில் தற்போது முன்னோடி திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் தர்மபுரி மாவட்டம் (30.40 சதவீதம்) முதலிடமும், பெரம்பலூர் (24 சதவீதம்), திருவண்ணாமலை (23.30 சதவீதம்) மற்றும் அரியலூர் (23.30 சதவீதம்) பாதிப்புடன் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 847 அரசு மற்றும் அரசு சார்ந்த நடுநிலை (26), உயர்நிலை (652) மற்றும் மேல்நிலை (169) பள்ளிகளில் உள்ள 30,209 மாணவிகளுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு எச்.பி.வி தடுப்பூசி 60,375 டோஸ்கள் பெறப்பட்டுள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்திற்கு 16,464 டோஸ்களும், அரியலூருக்கு 9,296 டோஸ்கள், பெரம்பலூர் 5,824 டோஸ்கள் மற்றும் திருவண்ணாமலை 28,784 டோஸ்கள் அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டில் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு, 4 மாவட்டங்களில் எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முன்னோடி திட்டத்தை, நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எச்பிவி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 14 வயதுடைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை இன்றைய தேதியில் எமிஸ் போர்டல் மூலம் 7,391 என கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களில் 2084 பேர் உயர்நிலைப்பள்ளியிலும், 525 பேர் மேல்நிலைப்பள்ளியிலும், 102 பேர் நடுநிலைப்பள்ளிகளும் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.இந்த தடுப்பூசி செலுத்தும் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, அனைத்து பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் டீன் மனோகர், நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, குழந்தைகள் நல மருத்துவர் காந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: