*81 பேர் ஆப்சென்ட்
வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் துவங்கிய நிலையில் நேற்று மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 80 பேர் வரை ஆப்சென்டாகினர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர், மத்திய சிறை, கிளைச் சிறைகளில் சிறை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடங்கள் குறித்த விவரம் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மூலம் தமிழ்நாடு டிஜிபிக்கு அனுப்பப்பட்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு காவலர் பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,833, 2ம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 2ம் நிலை சிறை காவலர்களுக்கான 180 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 142 பணியிடங்கள் ஆண்களுக்கும், 38 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 631 ஆண் தீயணைப்பாளர் பணியிடங்கள் என்று மொத்தம் 3 ஆயிரத்து 644 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் திருத்தம் செய்வதற்காக செப்டம்பர் 25ம் தேதி வரை வாய்ப்புளிக்கப்பட்டது.
தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9ம் தேதி நடந்தது. இந்த எழுத்துத் தேர்வில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 970 ஆண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று 27ம் தேதி உடற்தகுதி தேர்வு தொடங்கியது.
இத்தேர்வு 2 கட்டங்களாக வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் உடற் தகுதித்தேர்வும், டிஐஜி தலைமையில் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணியும் நடக்கிறது.
இதில் முதல்கட்டமாக நேற்று 480 விண்ணப்பதாரர்களுக்கும், இன்று 28ம் தேதி 490 விண்ணப்பதாரர்களுக்கும் என மொத்தம் 970 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 481 பேரில் 81 பேர் வரை ஆப்சென்டாகினர். மீதமுள்ள 400 பேருக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் 328 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் 2ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
2ம் கட்ட உடற்தகுதி தேர்வு 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. இதில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. தகுதித்தேர்வு காலை 6 மணிக்கு தொடங்குவதால் அதற்கு அரை மணி நேரம் முன்பாகவே விளையாட்டு மைதானத்துக்கு வந்துவிட வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் பெரும்பாலான தேர்வர்கள் அதிகாலையே வேலூர் நேதாஜி ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.
மேலும் இவர்களுக்கு அழைப்பு கடிதம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் 2 நகல்களுடன் வர வேண்டும். அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்கள் புகைப்படத்தை உடன் கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுகளில் அரைக்கால் சட்டை, மற்றும் டி-சட்டை அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால் ஒரே வண்ணம் கொண்ட எந்தவித எழுத்துகளோ, படங்களோ இல்லாமல் இருக்க வேண்டும்.
பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ அச்சிடப்பட்ட உடை அணிந்து வந்தால் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படும். செல்போன் மற்றும் எவ்வித மின்னணு சாதனங்களையும் கொண்டுவரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
