நெல்லை, ஜன.26: பாளை ராஜகோபால சுவாமி கோயில் ரத சப்தமியை முன்னிட்டு நேற்று காலை முதல் மாலை வரை சூரிய பிரபை வாகனம் உள்ளிட்ட 7 வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நடைபெறும் ரத சப்தமி பிரசித்திபெற்றது. இதேபோல் பாளையில் அமைந்துள்ள அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் 12வது ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது. இதையொட்டி ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு இரட்டை கருடசேவை வாகனத்திலும், 10 மணிக்கு ஆதிசேஷ வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளலைத் தொடர்ந்து வீதியுலா நடந்தது.
இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனமும், பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு இந்திர விமானத்திலும், மாலை 6 மணிக்கு அனுமன் வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளலைத் தொடர்ந்து வீதியுலா நடந்தது. இதில் பாளை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
