கும்பகோணம், ஜன. 26: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் சர்தார் வல்லபாய் படேலின் தேசிய ஒருங்கிணைப்பு கொள்கைகள் மற்றும் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் இந்திய அரசின் வரலாற்று ஆய்வு குழுமத்தின் நிதி நல்கையுடன் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் மாவலிராஜன் கருத்தரங்க நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் மத்திய ஆப்பிரிக்கா ருவாண்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குப்புராம், ஜெயங்கொண்டம் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் ரமேஷ், கணிணி அறிவியல் துறைத்தலைவர் சங்கரநாராயணன், பரமக்குடி கல்லுாரி முதல்வர் கோவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கருத்தரங்கு நிறைவு அறிக்கையை அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுதுறை தலைவர் ராஜா வழங்கினார். இக்கருத்தரங்கில் 67 ஆராய்ச்சி கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் சகாதேவன், இணை ஒருங்கிணைப்பாளர் விஜி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தினர். நிறைவாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
