தேனி, மார்ச். 16: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி துப்பாக்கி லைசன்ஸ்தாரர்கள் தங்களது துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளதையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும், தங்கள் வசம் வைத்துள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று மாலை முதல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மறு உத்தரவு வரும் வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் அருகில் உள்ள தங்கள் வசம் உள்ள துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் அத்தகைய உரிமதாரர்கள் மீது படைக்கல சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பில் வைக்கப்படும் துப்பாக்கிகள் தேர்தல் பணிகள் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட உரிமதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சார்பு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திட வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
