தெளிவாக சிந்தித்து வாக்களியுங்கள்: தேசிய வாக்காளர் தினத்தில் ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: இந்தியா குடியரசு நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக 1950 ஜனவரி 25ம் தேதி தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 16வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், ‘‘வாக்களிப்பு என்பது வெறும் அரசியல் வெளிப்பாடு மட்டுமல்ல, அது தேர்தல்களின் ஜனநாயக செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. நாட்டில் தேர்தல் முறையை வலுப்படுத்த வசீகரம், பாரபட்சம், தவறான தகவல்களை தவிர்த்து இந்தியர்கள் தெளிவோடு வாக்குரிமையை பயன்படுத்துவார்கள்’’ என்றார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவின் தேர்தல் பயணம் அதன் ஜனநாயகத்தின் வலிமை, மீள்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கு குறிப்பிடத்தக்க சான்றாக இருந்து வருகிறது. பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம், நம்பகமான ஜனநாயக செயல்முறைகளுக்கு மக்கள் பங்களிக்கின்றனர்’’ என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘வாக்காளராக இருப்பது வெறும் அரசியலமைப்புச் சலுகை மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது முக்கியமான கடமை. ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்பதன் மூலம் நமது ஜனநாயகத்தின் உணர்வைப் போற்றுவோம். ’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘ தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் தொடர்ச்சியான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. எனவே ஜனநாயகம் உண்மையாகவே செழித்து வளர, அவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பு’’ என்றார்.

Related Stories: