சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தர்மர் எம்.பி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து இருந்த போது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழக்கப்பட்டது.
ஒன்றியச் செயலாளராக இருந்த தர்மருக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளராக தர்மர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதை தொடர்ந்து தர்மர் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதா கனவை நனவாக்க இணைந்துள்ளோம். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரியாதை நியமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அதிமுக எம்பியாகவே நாடாளுமன்றத்தில் உள்ளேன்.
