மேட்டூர்: மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு, பாத யாத்திரை சென்ற பக்தரை அடித்து கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. வனப்பகுதியில் மேலும் 3 சிறுத்தைகள் நடமாடுவதால், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மாதேஸ்வரன் மலைப்பாதையை மூட திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோயில் பிரசித்தி பெற்றது. கடந்த 21ம்தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 பக்தர்கள், மாதேஸ்வரன் சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். தாளபெட்டா பகுதியில் வந்த போது, வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று பக்தர்களை விரட்டியது. மற்றவர்கள் தப்பியோடிய நிலையில், பிரவீன் என்பவர் சிறுத்தையிடம் சிக்கிக் கொண்டார். சிறுத்தை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டிலிருந்து மேட்டூர், கொளத்தூர், பாலாறு வழியாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு பாத யாத்திரை செல்லவும், டூவீலரில் செல்லவும் தமிழக பக்தர்களுக்கு கர்நாடக வனத்துறை தடை விதித்தது. இதனால் மேட்டூர், கொளத்தூரில் இருந்து பாதயாத்திரை சென்ற பக்தர்களும், டூவீலரில் சென்றவர்களும் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில், நேற்று இரண்டாவது நாளாக தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், அங்கிருந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று பக்தரை தாக்கிய சிறுத்தையை, கர்நாடக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மூன்று வயதுடைய ஆண் சிறுத்தையை, கர்நாடக வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். இருப்பினும் நடந்து செல்லவும், டூவீலரில் செல்லவும் கர்நாடக வனத்துறை விதித்த தடை, 24ம் தேதி நள்ளிரவு வரை நீடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இரு மாநில எல்லையில், தமிழக வனப்பகுதியில் 3 சிறுத்தைகள் இருப்பதை, சென்னம்பட்டி வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், மாலை 6 மணிக்கு பாலாறு-மைசூர் சாலையை மூட கர்நாடக வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். அரசிடம் அதற்கான அனுமதி கிடைத்தவுடன், பாலாறு மாதேஸ்வரன் மலைப்பாதை மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும். மீண்டும் மறுநாள் காலை 6 மணி முதல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கர்நாடக வனத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
