சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகள் திவ்யதர்ஷினி(17) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார். சக மாணவிகளுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்த அவர், மைதானத்தில் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். அவரை சக மாணவிகள் மீட்டு, காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், திவ்யதர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உடனிருந்த மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.
