சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. 9.10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கின. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த ஆண்டு மொத்தம் 9,10,902 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 8,82,806 பேர் பள்ளி மாணவ, மாணவியர். 26,196 பேர் தனித்தேர்வர்கள். 395 சிறைவாசிகள் அந்தந்த சிறை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மையங்களில் தேர்வெழுதினர். மாநிலம் முழுவதும் மொத்தம் 4,219 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுத் துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, வினாத்தாள்கள் வழங்கப்பட்ட பிறகு மீதமுள்ள உபரி வினாத்தாள்களை, தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் முன்னிலையிலேயே உறையில் வைத்து சீல் வைக்கும் புதிய முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முறைகேடுகளைத் தடுக்கவும், காப்பியடித்தல் போன்ற செயல்களைக் கண்காணிக்கவும் மாநிலம் முழுவதும் 4,954 பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தேர்வுப் பணியில் சுமார் 49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1:15 மணி வரை நடைபெற்றது. 10 மணி முதல் 10:10 மணி வரை வினாத்தாள் வாசிப்பதற்கான நேரம்.10.10 – 10:15 தேர்வர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நேரம். 10:15 – 01:15 : விடைகளை எழுதுவதற்கான நேரமாகும்.
தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு வர மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் கசிவைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர்வு தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள 9498383075 மற்றும் 9498383076 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய இந்தப் பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 20ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
