இரவு நேரங்களில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கத்திகோடு மந்து பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கத்திக்கோடு மந்து பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் யானைகள் விளைநிலங்களை சீரழித்து வருவதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: