குன்னூர் அருகே பழங்குடியின கிராமத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு

குன்னூர் : குன்னூர் அருகே பழங்குடியின கிராமத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள நிலையில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாமல் இருக்க நக்சல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு பிரிவு போலீசார் எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொலக்கொம்பை காவல்துறை சார்பாக மல்லிகொரை பழங்குடியின கிராமத்தில் மாவோய்ஸ்ட் நடமாட்டம் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சிறப்பு விருந்தினராக குன்னூர் வட்டாச்சியர் ஜவஹர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து உலிக்கல் வருவாய்த்துறை ஆய்வாளர் சோபனா, கிராம நிர்வாக அலுவலர் தீபக், உலிக்கல் பேரூராட்சி தலைவர் ராதா ஆகியோர் கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இம்முகாமில் சுகாதாரத்துறை, வனத்துறை, மின்வாரியத்துறை உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: