ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் கல்லறையில் அவரது கொள்ளு பேரன்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது 1850களில் நாடு முழுவதும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
மலேரியா நோய்க்கு மருந்தான சின்கொய்னா நாற்றுக்களை பெரு மற்றும் பொலிவியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நடுவட்டம், தொட்டபெட்டா உட்பட பல பகுதிகளில் நடவு செய்தனர்.
சின்கொய்னா தோட்டங்களை கண்காணிப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வில்லியம் கிரஹாம் மெக் ஐவர் நீலகிரி வந்தார். தொடர்ந்து ஊட்டியில் காய்கறி தோட்டமாக இருந்த நிலத்தை தாவரவியல் பூங்காவாக மாற்றினார்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 175 ஆண்டுகளையும் கடந்து தற்போது உலக புகழ்பெற்ற பூங்காவாக விளங்கி வருகிறது.
புகழ்பெற்ற பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் கல்லறை ஊட்டியில் உள்ள ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் உள்ளது. மெக்ஐவரின் மனைவி வழி உறவினர்களான கொள்ளு பேரன்கள் இங்கிலாந்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் கொள்ளு தாத்தா மெக் ஐவரின் கல்லறை, ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து சென்னையில் வசிக்கும் அவரது கொள்ளு பேரன்களின் ஒருவரான கேபா அலெக்ஸ் (35) கூறுகையில், ‘‘நான் சென்னையில் வசித்து வருகிறேன்.
இம்முறை ஊட்டி வந்த போது 18ம் நூற்றாண்டில் இங்கு வந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் என்னுடைய கொள்ளு தாத்தா என்பதும், மெக் ஐவரின் மனைவியின் தங்கை வழியில் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
எங்கள் குடும்பத்திற்கு என தனி வரலாறு இருப்பதை அறிந்து மகிழ்கின்றேன். சின்கொய்னா தோட்டத்தில் பணியாற்றி மருந்துகள் உற்பத்தி செய்ததால்,அவரது கல்லறையிலும் சின்கொய்னா செடிகளின் வடிவம் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை கேட்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன்’’ என்றார்.
இங்கிலாந்தில் இருந்து வந்த நிர்ரௌசன்(65)கூறுகையில், ‘‘எனது ஆங்கிலோ இந்தியன் உறவினரான கேபா அலெக்ஸ் மற்றும் உறவினர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்து ஸ்டீபன் சர்ச்சை பார்வையிட்டேன். எனது தந்தை அவருக்கு 8 வயதாக இருக்கும் போது இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் கல்லறை இங்கு இருப்பதை அறிந்து பார்வையிட்டேன்.
புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது நினைவு நாளான்று(ஜூன் 8ம் தேதி) மரியாதை செலுத்தி வருவதை கேட்டு நெகிழ்ச்சியுற்றேன். தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் மூலம் எங்கள் குடும்பத்திற்கும் நீலகிரிக்கும் நூற்றாண்டுகள் கடந்தும் பந்தம் இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யமாக உள்ளது’’ என்றார்.
