*தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் தவிப்பு
*பாதுகாக்க மானியத்துடன் கடன் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
கூடங்குளம் : கூடங்குளம் அருகே தில்லைவனந்தோப்பில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக தென்னந்தட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் சூழலில் சமீபகாலமாக இத்தொழில் நலிந்து வருவதால் அவர்களது வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொழிலை பாதுகாக்க மானியத்துடன் அரசு கடன் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி ஊராட்சி தில்லைவனம்தோப்பு ஊரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னந்தட்டிகள் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
தென்னந்தோப்புகளில் உள்ள தென்னை ஓலைகளை கொள்முதல் செய்து அதனை காய வைத்து பின்பு தண்ணீரில் போட்டு பக்குவப்படுத்தி பின்பு அதனை தென்னந்தட்டிகளாக தயாரிக்கின்றனர். தென்னந்தட்டி செய்யும் தொழிலாளருக்கு ஒரு தட்டிக்கு ரூ.2 ஊதியம் வழங்கப்படுகிறது.
அதன்படி தொழிலாளி ஒரு நாளைக்கு சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை வருவாய் ஈட்டுகின்றனர். இப்பகுதியில் தயாராகும் தென்னந்தட்டிகள் தரமாக இருப்பதால் வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,தெலங்கானா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து தென்னந்தட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த காலங்களை போல் இல்லாமல் தென்னந்தட்டிகள் ஏற்றுமதி என்பது குறைவாக தான் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் சமீபகாலமாக வீடு கட்டுபவர்கள் மேற்கூரைக்கு சிமெண்ட் ஷீட் மற்றும் கான்கிரீட் கூரைகள் அமைக்கின்றனர். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கூட திருமண மண்டபம், வீடு முன்பு பந்தல் அமைப்பதற்கு சாமியானா துணிகள் மற்றும் தகர ஷீட்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
தென்னந்தட்டிகள் மூலம் பந்தல் அமைப்பதை பலர் தவிர்த்து வருகின்றனர். இதனால் தென்னந்தட்டிகள் தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை மட்டும் நம்பி வாழும் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு காலத்தில் இங்கு தயாரிக்கப்படும் தென்னந்தட்டிகளுக்கு மவுசு அதிகமாக இருந்தது.
அப்போது எங்களுக்கு தட்டிகள் தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வந்தோம். முன்பெல்லாம் சுப நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் தென்னந்தட்டி அமைத்து தான் பந்தல் அமைத்து வந்தனர். சமீபகாலமாக துணிகள் மற்றும் தகர ஷீட் மூலம் பந்தல் அமைத்து வருகின்றனர்.
இதனால் தென்னந்தட்டிகள் விற்பனையும் குறைந்து விட்டது. 1½ அடி அகலமும், 7 அடி நீளமும் கொண்ட 25 எண்ணிக்கை கொண்ட தென்னந்தட்டிகள் ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் ரூ.150க்கும் விற்பனையாகிறது.
சில நேரங்களில் தென்னந்தட்டிகள் விற்பனையாகாமல் தேங்கும் நிலையில் உள்ளது. இதனை பாதுகாப்பதற்கு எந்த வித வசதியும் இங்கு இல்லை. இதனால் நாங்கள் தயாரிக்கும் தென்னந்தட்டிகள் சில நேரங்களில் வீணாகி விடுகிறது. இந்த தொழிலை புத்துயிரூட்டும் வகையில் அரசு எங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.
மழை மற்றும் வெயில் காலங்களில் தென்னந்தட்டியை தயாரிப்பதற்கு வசதியாக அரசு சார்பில் சமூதாய நல கூடங்கள் கட்டி தர வேண்டும். மேலும் இயற்கை முறையில் தென்னந்தட்டிகளை கொண்டு பந்தல் அமைப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.
* தொழிலாளருக்கு ஒரு தட்டிக்கு ரூ.2 ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி தொழிலாளி ஒரு நாளைக்கு சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை வருவாய் ஈட்டுகின்றனர்.
* இந்த தொழிலை மட்டும் நம்பி வாழும் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
* தென்னந்தட்டிகள் விற்பனையாகாமல் தேங்கும் நிலையில் உள்ளது. இதனை பாதுகாப்பதற்கு எந்த வித வசதியும் இங்கு இல்லை. இதனால் நாங்கள் தயாரிக்கும் தென்னந்தட்டிகள் சில நேரங்களில் வீணாகி விடுகிறது.
