ஒரத்தநாடு, ஜன.24: ஈச்சங்கோ ட்டை அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங்கோட்டை அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஜனநாயகத்தில் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில், ஈச்சங்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது பேரணியில், ஒவ்வொரு வாக்கும் மதிப்புடையது’, ‘வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்போம்‘, ‘இன்றைய வாக்கு நாளைய எதிர்காலம்‘ போன்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் தேர்தலில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதின் அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர். இப்பேரணி அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றது.
