ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஜெயிலில் மலர்ந்த காதல்: கல்யாணம் செய்து கொள்ள பரோலில் விடுவிப்பு

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில திறந்தவெளி சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் இருவர் திருமணம் செய்து கொள்ள பரோலில் விடுவிக்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா என்பவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் (34) என்பவரும், அல்வார் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் (29) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் 2023ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில் சிறையில் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பரோல் கேட்டு விண்ணப்பித்த நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இருவருக்கும் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்த இந்த ஜோடிக்கு, அனுமார் பிரசாத் சொந்த ஊரான பரோடாமியோவில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இது குறித்துக் கைதிகளின் வழக்கறிஞர் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுப்படியே பரோல் கிடைத்துள்ளது’ என்றார்.

ஆனால், பிரியா சேத் வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் சந்தீப் லோஹாரியா கூறுகையில், ‘எங்களுக்குத் தெரிவிக்காமலே பரோல் வழங்கப்பட்டுள்ளது; இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகள் இருவர் சிறையில் காதலித்துத் திருமணம் செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: