புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ம் ஆண்டு நடைபெறவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு காலவரையியின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி இரண்டு கட்டங்களாகக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் இந்த ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் 2021ம் ஆண்டு கேட்கத் திட்டமிடப்பட்டிருந்த அதே 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. இதில் வீட்டின் எண், தரை, சுவர் மற்றும் மேற்கூரைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் நிலை மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் சேகரிக்கப்படும். மேலும் குடும்பத் தலைவரின் பெயர், பாலினம் மற்றும் அவர் பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினரா என்ற விபரங்களும் கேட்கப்படும். வீட்டின் உரிமையாளர் யார், தம்பதிகள் எண்ணிக்கை மற்றும் வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களும் இந்தக் கணக்கெடுப்பில் முக்கியமாக இடம்பெறும்.
பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை அறியும் வகையில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி மற்றும் கழிவுநீர் வெளியேறும் முறை ஆகியவை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். சமையலுக்குப் பயன்படுத்தும் எரிபொருள், எல்பிஜி அல்லது சிஎன்ஜி இணைப்பு உள்ளதா என்ற விபரங்களும் சேகரிக்கப்படும். மேலும் வீட்டில் உள்ள ரேடியோ, டிவி, இணையதள வசதி, செல்போன், ஸ்மார்ட்போன் மற்றும் வாகனங்கள் குறித்த விபரங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.
முக்கியமாக அவர்கள் உணவில் பயன்படுத்தும் தானியங்கள் எவை என்ற விபரமும், தொடர்புக்காகக் குடும்பத் தலைவரின் செல்போன் எண்ணும் சேகரிக்கப்படும். 2027ம் ஆண்டு, பிப்ரவரி 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், 1931ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகச் சாதிவாரி விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
