மும்பை: வன்முறை வழக்கில் தலைமறைவாக உள்ள அமைச்சரின் மகனை இன்னும் கைது செய்யாதது குறித்து மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாத் நகராட்சித் தேர்தல் தொடர்பாகக் கடந்த டிசம்பர் 2ம் தேதி சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரம் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநில கேபினட் அமைச்சர் பரத் கோகவாலேவின் மகன் விகாஸ் கோகவாலே மற்றும் அவரது உறவினர் மகேஷ் கோகவாலே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், இருவரும் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சரின் மகன் இன்னும் கைது செய்யப்படாதது குறித்துக் கடும் கோபமடைந்த நீதிபதி, ‘மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அமைச்சரின் மகன் என்பதால் அவருக்குச் சிறப்புச் சலுகை எதுவும் கிடையாது; ஒருவரைக் கைது செய்ய முடியாத அளவிற்கு மாநில முதல்வர் (பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்) அவ்வளவு பலவீனமானவரா?’ என்று அரசு தரப்பை நோக்கிச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், ‘தேடப்படும் நபர் தலைமறைவாக இருந்தபடியே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றால், போலீசார் என்ன செய்கிறார்கள்’ என்றும் அவர் கடிந்து கொண்டார். இதனையடுத்து, விகாஸ் கோகவாலே உடனடியாகப் போலீசில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
