புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, முதியவர் என்பதற்கான வரையறை குறித்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் இடையே நடந்த நகைச்சுவையான உரையாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாடகை பாக்கி மற்றும் குடியிருப்பவரை வெளியேற்றுவது தொடர்பான வழக்கு ஒன்றில், 61 வயதான பெண்மணி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்தப் பெண்மணியின் வழக்கறிஞர் ஆஜராகி, ‘மனுதாரர் ஒரு வயதான மூத்த குடிமகன் என்பதால், இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதில் அளித்த நீதிபதி உஜ்ஜல் புயான், தம்மைப் போலவே அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகளையும் சுட்டிக்காட்டி, ‘நாங்கள் அனைவரும் 61 வயதைக் கடந்தவர்கள்தான்’ என்று புன்னகையுடன் தெரிவித்தார். உடன் இருந்த நீதிபதி பி.வி.நாகரத்னா இந்த உரையாடலில் குறுக்கிட்டு, ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை விட நீதிபதிகளாகிய எங்களுக்குத்தான் வயது வேகமாக ஏறுகிறது’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த உரையாடல், நீதிமன்ற அறையில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சுவாரசியமான விவாதத்திற்குப் பிறகு, நீதிபதிகள் வழக்கின் சட்டப்பூர்வ அம்சங்களை விரிவாக ஆராய்ந்து விசாரணையைத் தொடர்ந்தனர். தற்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருக்கும் பி.வி.நாகரத்னா, வரும் 2027ம் ஆண்டு நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
