* மதுரை வந்த பிரதமர் மோடி, மதுரவாயல் – துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதற்கு பின்னால் தொடங்கிய தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரவாயல்-துறைமுகம் பணிகளின் தாமதத்திற்கு என்ன காரணம்?
மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தாமதத்திற்கான காரணத்தினை அவர்களிடமிருந்து தான் நீங்கள் கேட்க வேண்டும். இப்பணியினை விரைந்து முடிக்க அனைத்து விதமான ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துவேன்.
* சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அடுத்தடுத்து மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்கள் எப்படி விரைவாக முடிக்கப்பட்டுள்ளன? இன்னும் புதிய மேம்பாலங்கள் பணிகள் நடந்து வருகின்றனவே, அவையெல்லாம் எப்போது முடிக்கப்படும்?
பணி மேற்கொள்ளும் இடத்தில் இருக்கும் சேவை தளவாடங்களை மாற்றி அமைத்தல், நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்துதல், நீதிமன்ற வழக்குகள் இருந்தால் அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தல், மேலும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேறு ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அவற்றை களைந்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதின் விளைவாக மேற்கண்ட நகரங்களில் மேம்பாலப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது.
நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெரும்பாலான மேம்பால பணிகளை ஒப்பந்த காலத்திற்கு முன்னரே முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன். அதேபோல நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஒப்பந்த காலத்திற்கு முன்னரே முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பாலத்தை பொறுத்தவரை ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலை மேம்பால பணியினை இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணியினர் திமுகவுக்கு வந்துள்ளதால், பலன் எவ்வளவு கூடும்? திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது முடியும்?கூடுதல் பலன் கிடைக்கும். சுமுகமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் முடிய வாய்ப்பு உள்ளது.
* இந்த தேர்தலில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? திமுக கூட்டணி எவ்வளவு தொகுதிகளில் வெல்லும்?கழக ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. மக்களுக்காக செய்து வரும் எண்ணற்ற நலத்திட்டங்களால் இந்த ஆட்சியே தொடர்ந்து வரவேண்டும் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. இந்த தேர்தலில் மக்களின் மனநிலை தேர்தல் முடிவு வந்த பின்னர் உங்களுக்கு தெரிய வரும். எங்கள் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்.
