டிஜிட்டல் பிரசாரம் ஆதிக்கம் நிறைந்த காலத்திலும் மவுசு குறையாத சுவர் விளம்பரங்கள்: அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி

 

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட கையோடு, வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போகிறது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிக்கு ஆலோசனை நடத்த அலுவலகத்தை திறத்தல், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி உள்ளனர்.

இதுதவிர திமுக மகளிர் அணியினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அரசு சார்பில் மகளிளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அதுபோல் அதிமுகவினரும் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஒவ்வொரு பகுதியாக அளித்து வருகின்றனர். தவெகவை பொறுத்தவரை தங்கள் சின்னமான விசிலை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இவை ஒருபுறம் இருக்க சமூகவலைதளங்களின் ஆதிக்கம் மிகுந்த இக்காலத்திலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவினர் சுவர் விளம்பரங்கள் வரைவதிலும் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். குறிப்பாக உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் எங்கு பார்த்தாலும் வரையப்பட்டுள்ளதால் கிராமப்புற சுவர்கள் பளிச்சிடுகின்றன. இதேபோல அந்ததந்த கட்சிகள் தங்கள் சின்னங்களை வரைவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். சில வீடுகளின் சுவர்களில் டிஎம்கே, ஏடிஎம்கே என்கிற வாசகங்களை எழுதி முன்பே முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. பாஜ மற்றும் தவெகவினரும் சுவர் விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாலங்களின் தடுப்புச் சுவர்கள், பூட்டிக்கிடக்கும் வணிக வளாகங்கள், சாலை தடுப்புச்சுவர்கள் ஆகியவற்றிலும் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் செல்போன்களிலும் தொடங்கி உள்ளனர். தி.மு.க மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த தகவல்தொழில்நுட்ப அணியினர் இருகட்சிகளின் ஆட்சியிலும் நடத்தப்பட்ட சாதனை திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் டிஜிட்டல் பிரசாரத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

Related Stories: