பாஜவுடன் தவெக கூட்டணியா? சி.டி.ஆர்.நிர்மல்குமார் சலிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று பனையூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்களின் தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருப்பமனு கொடுத்த முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து நேர்காணல் நடத்தியுள்ளார். மாவட்ட வாரியாகவும் தனித்தனியாகவும் சந்தித்து நேர்காணல் நடத்தினார். இது முதல்கட்ட நேர்காணல்தான், வரும் நாள்களில் அடுத்தகட்ட நேர்காணல்கள் நடைபெறும். பாஜவுடன் கூட்டணி என்ற யூகங்களின் அடிப்படையில் வரும் எந்தக் கருத்துக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. எதாவது அறிவிப்பு வருகிறது என்றால் அது அதிகாரப்பூர்வமானதாக இருக்கும்.

வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என தலைவர்தான் முடிவு செய்வார். இப்போதுதான் நேர்காணல் தொடங்கியுள்ளது. விருப்பமனுக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து நேர்காணல் நடத்திவருகிறார். வந்த விருப்ப மனுக்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்து வருகிறார். அனைத்துக்கட்ட நேர்காணலும் முடிவடைந்த பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த வாரம் எங்கள் தலைவருக்கு சிபிஐ சம்மன் வழங்கப்பட்டது. தலைவருக்கு நிறையப் பணிகள் இருந்ததால் வேறு ஒரு தேதியும் சென்னைக்கும் மாற்றிக் கேட்டிருந்தோம். ஏற்கனவே விஜய் டெல்லியில் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்களை அளித்துள்ளார். நாங்கள் வேறு தேதி கேட்டதால், இப்போது மறுபடியும் 15ம் தேதி டெல்லியில் ஆஜராகச் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* புதிய எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து
தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தேமுதிக கட்சியைச் சேர்ந்த எல்.சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், ‘தே.மு.தி.க. நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்ற விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த ஆண்டில் இருந்து தே.மு.தி.க.வின் வெற்றி பயணம் தொடர்கிறது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார்’ என்றார்.

Related Stories: