சில நேரங்களில் இறைவன் நாம்கேட்கும் வரத்தை ஏன் தருவதில்லை?

ஒரு அருமையான கதை. இது கதை என்று சொல்வதால் கற்பனை நிகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நடந்த ஒரு சம்பவம். வித்யாரண்யர், சிறந்த அத்வைத துறவி. 1336-ஆம் ஆண்டில், ஹரிஹரர் மற்றும் புக்கராயன் எனும் இரு மன்னர்களை உருவாக்கி, விஜயநகரப் பேரரசை நிறுவியவர். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியாக இருந்தவர். இவர், மாயணாச்சாரி – மதி தேவி தம்பதியருக்கு பம்பா சேத்திரம் எனும் (தற்கால ஹம்பியில்) ஊரில் 1268ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருடைய துவக்க கால வாழ்க்கை வறுமையில் கழிந்தது. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியைக் குறித்து தவம் செய்தார். மகாலட்சுமி தோன்றி, ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்க, இவர்; ‘‘எனக்கு ஐஸ்வரியம் வேண்டும். பணம் காசு வேண்டும்’’ என்று மகாலட்சுமியிடம் விண்ணப்பம் செய்தார். மகாலட்சுமி; ‘‘மகனே, உன்னுடைய தவத்திற்கு நிச்சயமாக ஐஸ்வர்யங்களைத் தருவதற்குச் சித்தமாகவே இருக்கிறேன். ஆனால், உன்னுடைய பிராரப்த கர்மா (இப்பிறவிக்கான நுகர்வினை) அதைப் பெற விடாமல் தடுக்கிறது. இந்தப் பிறவியில் நீ இப்படித்தான் வாழ வேண்டும் என்று விதித்திருக்கிறது. ஆகையினால் உன்னுடைய தவத்திற்கு, நீ கேட்ட செல்வத்தை, அடுத்த பிறவியில் நான் கட்டாயமாகத் தருகிறேன். அப்பொழுது நீ மிகப்பெரிய செல்வந்தனாகப் பிறப்பாய். செல்வத்தோடு இருப்பாய்’’ என்று சொல்ல, ‘‘இந்தப் பிறவியில் கிடைக்காத செல்வம் எனக்கு அடுத்த பிறவியில் கிடைத்து என்னம்மா ஆகப்போகிறது? ஆகையினால் நீ இந்தப் பிறவியிலேயே எனக்குச் செல்வத்தை அருள வேண்டும்’’ என்று வற்புறுத்திக் கேட்க, மகாலட்சுமி; ‘‘இல்லை மகனே, அது முடியாது. அப்படி நான் செய்ய முடியாது. இந்தப் பிறவியில் நீ ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது விதி’’ என்றார். இப்பொழுது வித்தியாரண்யர் யோசித்தார். அவர் மிகச் சிறந்த பண்டிதர். ஆகையினால் இப்பொழுது அவர் யுக்தியைக் கையாண்டார். உடனடியாக அவர் காவியுடை தரித்து, துறவறத்தை மேற்கொண்டார்.

துறவறம் என்பது ஒருவருக்கு இரண்டாம் பிறவி என்று சாத்திரம் சொல்லுகின்றது. காரணம், அவருடைய முதல் பிறவியை அவர் துறந்துவிட்டார். எனவே, அவருடைய பழைய பிறவி கழிந்துவிட்டது. இதே யுக்தியைத்தான் ஆதிசங்கரரும் கையாண்டார். அவர் குளத்தில் குளிக்கும் பொழுது, ஒரு முதலை காலைப் பிடித்துக் கொண்டது. அவருடைய தாய் செய்வதறியாது கதறினார். அப்பொழுது ஆதிசங்கரர் தன்னுடையதாயாரிடம், ‘‘அம்மா இந்தப் பிறவியில் நான் இந்த முதலையிடம் பலியாக வேண்டும் என்று விதித்திருக்கிறது அதை மாற்ற முடியாது. ஆனால், அதை மாற்றுவதற்கும் ஒரு வழி உண்டு’’ என்று கேட்க, அவருடைய தாயார்; ‘‘நீ உயிரோடு இருக்க நான் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு சித்தமாக இருக்கிறேன்’’ என்று சொல்ல, அப்போது ஆதிசங்கரர் தன்னுடைய அன்னையாரிடம் கேட்கிறார். ‘‘அம்மா, எனக்கு நீ சந்நியாசம் கொடு. அப்படி நான் சந்நியாசம் பெற்றுவிட்டால், எனக்கு பழைய பிறவி கழிந்து, புதிய பிறவி அடைந்துவிட்டேன் என்று பொருள். நான் சந்நியாசம் வாங்கிவிட்டால் இந்த முதலை என்னுடைய காலை விட்டுவிடும்’’ என்று சொல்ல, தன்னுடைய மகன் எப்படியாவது உயிர் பிழைத்திருந்தால் போதும் என்று அவருடைய தாய் சங்கரருக்கு சந்நியாசம் தந்தார் என்று ஒரு ஆதிசங்கரர் வாழ்க்கைக் கதையில் வரும். அதையே வித்தியாரண்யர் செய்தார். சந்நியாசம் வாங்கிக் கொண்டு, மகாலட்சுமியை தியானம் செய்து அழைத்தார். மகாலட்சுமி என்ன வேண்டும் என்று கேட்க, பழையபடி ஐஸ்வர்யம் வேண்டும் என்று சொல்ல, ‘‘இந்தப் பிறவியில்தான் உனக்கு ஐஸ்வரியம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேனே’’ என்று மகாலட்சுமி அவரிடம் சொல்ல, ‘‘அம்மா, நான் இந்த பிறவியைக் கழித்துவிட்டேன். சந்நியாசம் வாங்கிவிட்டேன்.

எனவே புதுப் பிறவி பெற்றுவிட்டேன். எனவே இப்பொழுது தாராளமாக எனக்கு ஐஸ்வரியத்தைத் தரலாம் என்று விளக்கம் சொல்ல, மகாலட்சுமி ஐஸ்வரியத்தை அள்ளித் தந்தார். அவரைச் சுற்றி பொன்னும் மணியும் ரத்தினங்களுமாக குவிந்து கிடந்தன. ஆனால் என்ன ஆகிவிட்டது தெரியுமா? ஐஸ்வரியம் கிடைத்துவிட்டதே தவிர, துறவறம் மேற்கொண்டு விட்டதால், இவரால் அந்த ஐஸ்வர்யத்தை தனக்காகப் பயன் படுத்த முடியவில்லை. துறவி, பணத்தை கையால் தொடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. எந்த சாஸ்திரப் பிரகாரம் அவர் மறுபிறவி எடுத்ததாகச் சொன்னாரோ, அதே சாஸ்திரம்தான் ஐஸ்வரியத்தை துறவி சொந்தத்திற்குப் பயன்படுத்த முடியாது என்றும் சொல்லுகிறது. இப்பொழுது அவர் யோசித்தார். நான் என்னதான் முயன்றாலும், எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அது அப்படித்தான் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ஒரு காரணம் உண்டு அல்லவா!தன்னைத் துறவறம் ஏற்க வைத்ததற்கும், துறவியாகிய தனக்கு இத்தனை ஐஸ்வர்யங்களைக் கொடுத்ததற்கும் ஏதோ ஒரு தெய்வ சங்கல்பம் இருக்க வேண்டும் என்று நினைத்த வித்தியாரண்யர், அந்த செல்வத்தை வைத்துக்கொண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தை, ஹம்பி என்ற ஊரில் நிறுவியதாக ஒரு வரலாறு உண்டு.

இதில் ஒரு நுட்பமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். நாம் பிரார்த்தனை செய்கிறோம். கேட்கின்ற அனைத்தையும் ஏன் இறைவன் அருளாது நிற்கிறான் என்கின்ற காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுதல் பல செய்தும், இறைவன் நாம் கேட்டதைத் தராமல் இருக்கிறான் என்று சொன்னால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிறவியில் உனக்கு ஐஸ்வரியம் கொடுத்தாலும், சொந்தத்திற்குப் பயன்படாது என்பது இந்த நிகழ்ச்சியின் மூலமாக வித்தியாரண்யருக்கு மகாலட்சுமி சொல்லவில்லை, நமக்குச் சொல்லுகிறார்.அதனால்தான், மாணிக்கவாசகப் பெருமான் வரம் தரும் பொறுப்பை இறைவன் மீது போட்டுவிட்டார். இறைவன் மணிவாசகரிடம். ‘‘உனக்கு என்ன வேண்டும் கேள்’’ என்று சொன்னபோது அவர் அழகாகப் பதில் சொன்னார்.‘‘எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைவிட நீதான் நன்றாக அறிவாய். அதனால் எனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதை அருள வேண்டும்’’ என்று பதில் சொல்லுகிறார்.‘‘வேண்டதக்கது அறியோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!’’ என்று சொல்லி, வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே! என்று முடிக்கிறார். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது ஒரு தாய்க்குத் தெரியாதா என்ன? குழந்தை கேட்டதை எல்லாம் தாய் தரவில்லை என்பதால் தாய்க்கு குழந்தையிடம் அன்பு இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை கேட்டதைத் தராமல் இருப்பதற்கும் அன்புதான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Related Stories: