முத்துப்பேட்டை,ஜன.22: முத்துப்பேட்டை அரசு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சதீஸ்குமார் வரவேற்று பேசினார்.
கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறப்பு அழைப்பாளராக கடலோரப் பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் கலந்துக்கொண்டு போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பற்றி பேசினர். இந்நிகழ்ச்சியில் காவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
