109) மஹா சக்தி
110) குண்டலிநீ
111) பிஸதந்து தநீயஸீ
– என்கிற மூன்று நாமங்களை சேர்த்து பார்க்கப் போகிறோம். நாம் இதற்கு முன்னால் உள்ள பல நாமங்கள் குண்டலினி சொருபத்தை காண்பித்துக் கொடுத்துக் கொண்டே வந்தது. சரீரத்திற்குள் அந்த மஹாசக்தி இருக்கிறது. எப்படி இருக்கிறது என்பதையும் அது காண்பித்துக் கொடுத்தது. குண்டலினி… குண்டலினி… என்கிற பெயரை கடந்த சில நாமங்களில் பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால், அந்தப் பெயரானது சஹஸ்ரநாமத்தில் இப்போதுதான் நேரடியாக “குண்டலினி’’ என்கிற பெயர் வருகின்றது. இந்த மூன்று நாமங்களும் ஒரு அலைவரிசையில் அமைந்திருக்கிறது. நாம் ஒருவரைப் பற்றி பேசுகிறோம் எனில், முதலில் அவர் யார் என்று முதலில் சொல்லுவோம். அதற்கடுத்து அவருடைய பெயரைச் சொல்லுவோம். அதற்கடுத்து அவருடைய உருவ அமைப்போ, அல்லது அவருடைய எதுவோ ஒரு விஷயத்தைச் சொல்லுவோம்.
மகான்களை குறித்தும் எடுத்துக் கொள்வோமே! அவர் ஒரு அவதார புருஷர் என்று சொல்வோம். அதற்குப்பிறகு அவருடைய நாமமான பெயரைச் சொல்வோம். உதாரணமாக, யோகிராம் சுரத்குமார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குப் பிறகு, அவருடைய புகைப்படத்தை எடுத்துக் காண்பிப்போம். இவர்தான் அவர் என்று காண்பிப்போம். இப்போது வசின்யாதி வாக் தேவதைகள் அப்படித்தான் சொல்கிறார்கள். இதற்கு முந்தைய நாமங்களான தடில்லதா ஸமருசி:, ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா என்று வர்ணித்தார்கள். இந்த நாமங்களில் மின்னல் கொடி போன்றவள். இந்த ஆறு சக்கரங்களிலும் இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
நம்முடைய சரீரத்திற்குள் அப்படிபட்ட உயர்ந்த விஷயம் இருக்கிறது என்று சொன்னால், நாம் அதை உடனே எல்லைக்கு உட்படுத்தி (limit) விடுவோம். இவ்வளவுதானே என்று குறைத்து விடுவோம். நாம் அதை மிகவும் சாதாரணம் என்று நினைத்து விடுவோம். ஏனெனில், நம்மைப் பொறுத்தளவில் சரீரம், மனம் என்று அனைத்தையும் கடந்துபோவது குறித்துத்தான் சாஸ்திரரீதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது இந்த சரீரத்திற்குள் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அதனுடைய மதிப்பை நம்மையும் நாம் குறைத்து விடுவோம். இந்த சரீரத்தினால்தான் எனக்கு பிறப்பு, இறப்பு என்றெல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதனால், அதனுடைய பெருமை எனக்குத் தெரியாமல் போய்விடும். நாம் ஏதேனும் இப்படி அறியாமையினால் மதிப்பை குறைக்கும்போது, ஆசிரியர் தலையில் மென்மையாக கொட்டுவதுபோல் வசின்யாதி வாக் தேவதைகள் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார்கள்.
உன்னுடைய சரீரத்திற்குள் இருப்பதால், அதை தரம் குறித்து மதிப்பிட்டு விடாதே. அது மகாசக்தி என்று தலையில் மென்மையாக கொட்டுகிறார்கள். இதில் என்ன ஆபத்து எனில், நாம் பேசுகின்ற எல்லையில்லா வஸ்துவையும் மனதின் எல்லைக்கு உட்படுத்தி (limit) செய்து விடுவான். அதுவொரு மகாசக்தி. மூலாதாரத்தில் மூன்றரை தடவை சுற்றியிருக்கிற சர்ப்பம் அது என்று சொல்லும்போது, இது என்னவோ நம்முடைய சரீரத்திற்கு உட்பட்டது என்று நினைத்து விடாதே. என்று சிறிய கொட்டு வைத்து அது ஒரு மஹாசக்தி என்று பெயர் வைக்கிறாள். காருண்யத்தினால் உன் சரீரத்திற்குள் அது வந்து இருக்கிறது. ஆனால், அது எல்லாவற்றையும் தாண்டி எதற்கும் கட்டுப்படாமல் இருக்கிறது.
இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் எது ஆதாரமாக இருக்கிறதோ, அந்த மகாசக்திதான் உன்னுடைய சரீரத்திற்குள்ளும் ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில், இந்த சரீரத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் எதுவும் பெரிய வித்தியாசம் கிடையாது. இந்த சரீரம் என்பது ஒரு form. இந்த பிரபஞ்சம் என்பதும் ஒரு form. இந்த சரீரம் என்பது இந்த ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய, ஒரு உடல். இந்தப் பிரபஞ்சம் என்பது பரமாத்விற்கு ஒரு உடல். அது விராட் புருஷ சரீரம். நம்முடைய சரீரம், கர்மத்தினால் உள்ள கர்ம சரீரம். இந்த சரீரத்திலேயும் ஆத்மாவாக இருப்பது பிரம்மம்தான். மொத்த பிரபஞ்சத்திற்கும் ஆத்மாவாக இருக்கக் கூடிய பிரம்மம்தான். சித்தர்களுடைய மரபில் இதை அண்டம், பிண்டம் என்று சொல்வது வழக்கம்.
அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. பிண்டத்திலுள்ளதுதான் அண்டத்திலுள்ளது. ஆங்கிலத்தில் micro cosmos, macro cosmos என்று சொல்வார்கள். சரீரம் micro cosmos. பிரபஞ்சம் என்பது macro cosmos. இந்த macro cosmos என்பது பிரபஞ்சத்தினுடைய ஆதார சக்தி என்பது நமக்குத் தெரியும். நாம் இயற்கையை பார்க்கிறோம். இதையெல்லாம் செய்வது அந்த மகாசக்திதான் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. ஆனால், அதே மகாசக்திதான் இந்த சரீரத்திற்குள்ளும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிச் சொன்ன வசின்யாதி வாக்தேவதைகள், அதே மஹாசக்தி உனக்குள் இருக்கும்போது அதற்கொரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயரே குண்டலினி என்பதாகும்.
ஏன் குண்டலிநீ என்று பெயர்?
குண்டலம் என்றால் வளைந்திருப்பது என்று அர்த்தம். நமக்குள் மூலாதாரத்தில் முன்றரை வளைவுகள் கொண்ட ஒரு சர்ப்ப ரூபத்தில் இருப்பதாக யோக சாஸ்திரம் சொல்கிறது. அதற்குப் பெயர்தான் குண்டலிநீ என்பதாகும். வளைந்து… வளைந்து… இருப்பதால், அதற்கு குண்டலிநீ என்று பெயர். ஆங்கிலத்தில் சொல்வதானால், coiled structure என்று சொல்லலாம். சுருட்டி வைத்திருப்பது. அந்த மஹாசக்தியை அப்படியே இந்த சரீரத்திற்குள் அப்படியே வைக்க முடியாது. இந்தச் சரீரம் தாங்காது. யோக மார்க்கத்தினுள் செல்லும் சாதகன் அந்த குண்டலிநீ விரியும்போது அதன் தன்மை புரியவரும். மற்றவர்களுக்கும் மகான்களுக்கும் என்ன வித்தியாசமெனில், அந்த சக்தி திறந்து கொண்டுவிட்டது. மற்றவர்களுக்குள் அது மூடிய நிலையில் உள்ளது.
இப்போது அந்த சக்தி திறந்து கொண்டு விட்டால், அந்த இடத்தில் சரீரம் என்கிற நிலையைக் கடந்து அவன் பிரபஞ்சமாகி விடுகின்றான். இந்த மஹாசக்தியான குண்டலிநீ விழித்துக் கொண்டு விகசிப்பதின் தத்துவார்த்தமே, இவன் இந்த உடலுக்குள் மட்டும் அடைபட்டவனல்லன் என்பதேயாகும். இப்போது மொத்த பிரபஞ்சமே அவனுக்கு சரீரம் ஆகிவிடுகின்றது. அப்படி ஆகிவிட்டால் அவனே சாட்சாத் பிரம்மம். எனவே, யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் சந்தித்துக் கொள்ளக்கூடிய அருமையான ஸ்தானத்தைப்பற்றியே இந்த நாமங்கள் பேசுகின்றன. ஞான மார்க்கத்தில் நாம் என்ன சொல்கிறோம். ஒருவன் தன்னுடைய சொரூபத்தை தெரிந்து கொள்ளுதலைத்தான் சொல்கிறோம். இவனுடைய சொரூபம் எது? பிரம்மம் என்று சொல்கிறோம். இங்கு அந்த பிரம்மமான சொரூபத்தை தெரிந்து கொள்வதற்கு இவனுக்குள் இருக்கக் கூடிய மகாசக்தி வேலை பார்க்கிறது. அப்படி வேலை பார்க்கிற மஹாசக்திக்கு குண்டலிநீ என்று பெயர். இப்படிச் சாதனா மார்க்கமாக செல்லும் பாதையை யோக மார்க்கம் என்கிறோம். அடையப் போகின்ற நிலை ஞானமார்க்கம் காட்டும் ஞான நிலை.
(சுழலும்…)
