மன்னர் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில், திருப்பத்தூர் மாவட்டம், சேலம் உடன் இணைந்து, `சேலம் ஜில்லா’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த சமயத்தில், கிழக்கு திசையில் `மகான் ஸ்ரீ வியாசராஜர்’ பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 13 அடியில், “வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ வீற்றிருக்கிறார். இவர் ஒரே பாறையில் காட்சியளிக்கிறார். இவருக்கு, “கோட்டை தர்வாஜா ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ என்னும் வேறுபெயரும் உண்டு. நாம் இவரை தர்வாஜா ஆஞ்சநேயர் என்கின்ற பெயரிலேயே காண்போம்.
சாய்ந்திருக்கும் அனுமன்
தர்வாஜா ஆஞ்சநேய ஸ்வாமி, சுமார் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அனைத்து கோயில்களிலும், 90 டிகிரிக்கு குறையாமல் ஸ்வாமியின் சிலாரூபம் காணப்படும். ஆனால், இக்கோயிலில் சற்று குறைந்து 80 டிகிரியில் அனுமன் சற்று சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அனுமனின் பின்பகுதியை பார்தோமேயானால், பாறையில் அனுமன் வீற்றியிருப்பது நன்கு புலப்படும். காலப் போக்கில், இக்கோயில் விரிவாக்கப்பட்ட பிறகு, அனுமனின் பின்பகுதியில் தெரிகின்ற பாறையானது தெரியாமல் மறைந்து காணப்படுகிறது. தர்வாஜா ஆஞ்சநேயரை பற்றி கேள்விப்பட்ட நாம், இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்கின்ற ஆவல் உதித்தது. சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று, அங்குள்ள சேண்பாக்கம் “நவபிருந்தாவன கோயிலை’’ தரிசித்த பின், அங்கிருந்து ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள “தர்வாஜா ஆஞ்சநேயஸ்வாமி கோயிலை’’ அடைந்தோம். அங்கு இருந்த கோயில் நிர்வாகியான நந்தகோபாலன், கோயிலைப் பற்றி நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறிய சாராம்சம் இதோ உங்களுக்காக…
காவல் தெய்வமான தர்வாஜா அனுமன்
தர்வாஜா ஆஞ்சநேயஸ்வாமி கோயிலின் மேற்கு திசையில், “கஜேந்திர வரதராஜப் பெருமாள்’’ கோயிலும், அதே போல், பிரம்ம தேவரால் பூஜிக்கப்பட்ட “பிரம்மேஸ்வரர்’’ கோயிலும் உள்ளது. இந்த இரு தெய்வங்களுக்கும் காவல் தெய்வமாக `தர்வாஜா ஆஞ்சநேயஸ்வாமி’ வீற்றியிருக்கிறார். ஒரு காலத்தில், வேலூர் கோட்டையோடு இணைந்து இந்த மூன்று தெய்வங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின், முகலாயர்களின் காலம் முடிந்து, ஆங்கிலேயர்களின் காலம் தொடங்கிய புதிதில், கோட்டையானது சற்று அழிவின் பாதைக்கு சென்றிருக்கிறது. இதற்கான கல்வெட்டுகள், தொல்லியல் துறையிடம் இன்றும் உள்ளது. தர்வாஜா ஆஞ்சநேயஸ்வாமியின் திருமுகம், தென்திசையை பார்த்தபடியும், தேகமானது மேற்கு திசையை நோக்கியும், கர்பகிரக வாயில் கிழக்கு திசையை நோக்கி அமையப்பட்டுள்ளது. இத்தகைய சந்நதியின் அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது.
தர்வாஜா பெயர் காரணம்
வியாசராஜர் பிரதிஷ்டை செய்யும் போது, ஆஞ்சநேயருக்கு பெயர் எல்லாம் கிடையாது. அதன்பின், முகலாயர்கள் காலம் வரும் சமயத்தில், அவர்கள் வேலூர் கோட்டைக்குள் நுழைகிறார்கள். நுழைவாயில் அல்லது கதவு என்னும் தமிழ் சொல்லிற்கு இந்தியில் “தர்வாஜா’’ என்று பெயர். ஆகையால், கோட்டை கதவுவின் அருகில் இந்த அனுமன் இருப்பதால், இவரை “தர்வாஜா ஆஞ்சநேயர்’’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். இவரை கடந்துதான் மற்ற தெய்வங்களான, கஜேந்திர வரதராஜப் பெருமாள், பிரம்மேஸ்வரர் ஆகியோரை தரிசிக்க முடியும். அப்படி ஒரு அமைப்பு அந்த காலத்தில் இருந்தது. தற்போது நவீனமயமானதால், காலப்போக்கில் இவ்விடம் மாற்றம் கண்டுவிட்டன.
வெள்ளியில் அனுமன்
ஸ்வாமியை பூஜிக்க வைணவத்தில் இரு ஆகம முறைகள் உள்ளன. ஒன்று வைகானசம், மற்றொன்று பாஞ்சராத்திரம். இந்த கோயில் வைகானசம் ஆகமத்தை பின்பற்றும் கோயிலாகும். இங்கு மூன்று அனுமன் அருள்கிறார். ஒருவர் சிலாரூபத்தில் இருக்கும் தர்வாஜா அனுமன், இரண்டரை அடியில் உற்சவர் மற்றும் அரை அடியில் வெள்ளியில் ஒரு உற்சவர் என மூன்று ரூபங்களாக அனுமன் இங்கு இருப்பது சிறப்பு. சமீபத்தில்தான், அரை அடியில் வெள்ளியில் செய்யப்பட்ட அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மிக அழகாக காட்சியளிக்கிறார். அது மட்டுமா! ராமர் – சீதா – லட்சுமணர் ஆகியோரும் அழகாக அருள்பாலிக்கிறார்கள்.
மட்டை தேங்காய்
ராமாயண காலகட்டத்தில், சீதையை தேடி அனுமன் செல்கிறார். அப்போது, பொதிகை மலைக்கு சென்று, அங்கிருந்து தாவி குதித்து இலங்கைக்கு செல்கிறார். அந்த சமயத்தில், உணவின் மீது கவனம் செலுத்தாது, முழு வீச்சாக சீதையை தேடுகிறார். ஒரு கட்டத்தில், கடல் பகுதிக்கு அனுமன் வர, அங்கு உணவருந்த ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அதிகளவில் தேங்காய் கிடைக்கிறது. அதனை உண்டு மகிழ்கிறார், அனுமன். அதன் தொடர்ச்சியாகத்தான், மட்டை தேங்காயினை கொண்டு, வேண்டுவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. பல ஆஞ்சநேயர் கோயிலில் மட்டை தேங்காயை கட்டி பிரார்த்தனை செய்வதை காணலாம். குறிப்பாக வடநாட்டில் பிரசித்தம். இந்த தர்வாஜா ஆஞ்சநேயர் கோயிலும் மட்டை தேங்காயை கட்டி பிரார்த்திக்கும் பக்தர்களை காணலாம். பிரார்த்தனை நிறைவேறியவுடன், கயிற்றில் கட்டிய மட்டை தேங்காயினை மீண்டும் பக்தர்களுக்கே வழங்கப்படுகிறது. அந்த தேங்காயினை வீட்டிற்கு கொண்டு வந்து, ஏதேனும் இனிப்பு வகைச் செய்து சாப்பிடலாம். இதில், என்ன ஆச்சரியம் என்றால், பிரார்த்தனை நிறைவேறும் வரையில் மட்டை தேங்காய் அழுகாமல் அப்படியே இருக்கும்.
மிதக்கும் கல்
“சேது சமுத்திர மிதக்கும் கல்’’ என்று சொல்லக்கூடிய, வெள்ளை நிறத்தில் இருக்கும் விசேஷ கற்கலும், ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, இங்கு தனியாக கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. ராமாயணகாலத்தில், ராமர் இந்த கற்களை கொண்டே சேது பாலம் அமைத்து, இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவ்வகை கற்கள், இன்றும் இலங்கை பகுதியில் மிதந்துக் கொண்டிருக்குமாம். இது தவிர, வாஸ்துவிற்காக கோயில் உள்ளே நுழைந்தவுடன், நேர் எதிரில் கண்ணாடி அறையில் ராமர் திருமண கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு பூஜைகள் ஏதும் கிடையாது.
வழிமுறை கிடையாது
கிருஷ்ணர், ராமர், சிவன், விநாயகர், முருகன் என அனைத்து தெய்வத்திற்கும், வழிபாடு முறை என்று இருக்கிறது. ஆனால், அனுமனுக்கு மட்டும், வழிபாடு முறை என்பது கிடையாது. பத்து முறை, “ராமா… ராமா..’’ என்று சொல்லி வேண்டிக்கொண்டாலே போதும், அந்த பிரார்த்தனையை, “ததாஸ்து’’ என்று உடனே நிறைவேற்றிவிடுவார். வேலூர், சென்னை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து, பலரும் திருமணம் வேண்டி அனுமனை பிரார்த்திக்கிறார்கள். அனுமனும் வேண்டியதை அருள்பாலிக்கிறார். இது போல் பலனடைந்தவர்கள் ஏராளம். மனமுருகி “ராமா…ராமா’’ என்று வேண்டிக் கொண்டாலே போதும், அனுமன் உடனே காரியசித்தியடைய செல்கிறார். திருமணம் நடைபெற்ற கையோடு, தர்வாஜா ஆஞ்சநேயருக்கு நன்றி தெரிவிக்க வருகிறார்கள். அவர்களுக்கு குழந்தையையும் அருள்கிறார் தர்வாஜர்.
கோலாகல அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி அன்று காலை 5.00 மணி முதல் பால், தயிர், தேன் என சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மேலும், ஒவ்வொரு காலத்திற்கும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்படும். அதன் பிறகு, அனுமனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்படும். அன்றைய தினம் உற்சவர், திருவீதி உலா வருவார். காலை 7.30 மணி அளவில், வரிசையாக பொது மக்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அன்றைய தினத்தில் பொங்கல் செய்து, அனுமனுக்கு நிவேதித்து, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். அதே போல், மாலை 4 மணி அளவில், மூலவருக்கு 5000 வடைமாலை அலங்காரம் நடைபெறும். அதே நேரத்தில் உற்சவரும், அலங்காரங்களை செய்துக் கொண்டு, அருகில் இருக்கும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று, பெருமாளிடத்தில் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு, மீண்டும் கோயிலுக்கு திரும்புவார்.
அதன் பின் மாலை 6 மணியளவில், ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மீண்டும் பக்தர்கள், தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில், புளியோதரையோ அல்லது மிளகு வடையோ அனுமனுக்கு நிவேதித்து,பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். அதே போல், அன்றைய தினத்தில் ஒரு இனிப்பு வகை செய்ய வேண்டும் என்பதற்காக, லட்டுகள் தயார் செய்து அதனையும் நிவேதித்து, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். பின்னர் சுமார் இரவு 7.30 மணியளவில், 5000 வடைமாலையையும் எடுத்து, பக்தர்களுக்கு கொடுக்கப்படும். இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோயிலில் கூட்டம் அலைமோதும். அதன் பிறகு, உற்சவர் அனுமனை கொண்டு, “ஏகாந்த சேவை’’ நடைபெறும். சரியாக இரவு 9 மணிக்கு, கோயில் நடை சாற்றப்படும்.
இரு முறை நடந்த கும்பாபிஷேகம்
1998-ஆம் ஆண்டு, இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு முன்பு எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை. அதன்பின் 2012-ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. மீண்டும் 2024-ஆம் ஆண்டில், குடமுழுக்கு விழா நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் போதிய நிதி இல்லாததால், தள்ளிச் சென்றுவிட்டது. தற்போது, அனுமனின் ஆசியோடு இந்தாண்டில் குடமுழுக்கு விழா நடைபெறவேண்டும்.
ராகு கால பூஜை
பிரதி வாரம் ஞாயிறு அன்று வரக்கூடிய 04.30 – 6.00 ராகு காலத்தில், தர்வாஜா அனுமனை வேண்டிக் கொண்டால், வேண்டியதை நிறைவேற்றுகிறார், தர்வாஜா அனுமன். இதனை பக்தர்கள் அனுபவப் பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அமாவாசை அன்று ஸ்வாமிக்கு திருமஞ்சனமும், மாலையில் வடைமாலை சாற்றியும் அனுமன் சேவை சாதிப்பார். அதே போல், பிரதி வருடம் பங்குனி மாதத்தில் நடக்கக்கூடிய, ஸ்ரீ ராமநவமி உற்சவம், மிக விமர்சையாக நடைபெறுகிறது. அதே போல், அமாவாசையில், முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதனை இக்கோயில் அர்ச்சகர் மூலமாக செய்யலாம்.
பிரசாதம்
சனி பிரீத்திக்காக, தர்வாஜா ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த “கொண்டைக்கடலை சுண்டலை’’ சனிக்கிழமை மற்றும் ராகு கால பூஜை அன்று நிவேதனம் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. யாரேனும் பிரார்த்தனை செய்துக் கொண்டு, வடைமாலை சாற்றினால், அதனையும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதே போல், சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்றவையும் நிவேதித்து விநியோகம் செய்யப்படுகிறது. ராமநவமி போன்ற விழாக்காலங்களில், புளியோதரை, தயிர்சாதம், போன்றவைகள் செய்யப்படும். இவைகள் எல்லாம் இருந்தாலும், அனுமனுக்கு சுண்டல்தான் பிரதானம்.
