உரையை வாசிக்காமல் ஜனநாயக படுகொலை செய்த தமிழக ஆளுநர் ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி, ஜன. 21: தமிழக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது ஜனநாயக படுகொலைக்கு சமம். இதற்கு ஆளுநர் நிபந்தனையின்றி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. சம்பிரதாயப்படி ஆளுநர் சட்டப்பேரவையில் ஆளும் அரசால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட உரையை வரி பிறழாமல் படிக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். இந்தாண்டும் ஆளுநர் சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடவில்லை என்ற காரணத்தை காட்டி அவையில் இருந்து அவருடைய உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறார். இது மிகவும் தவறான செயல்.

இது ஜனநாயக படுகொலைக்கு சமம். இந்திய அரசியலமைப்பை ஆளுநர் பகிரங்கமாக தமிழக மக்கள் மத்தியில் அவமதித்திருக்கிறார். அதற்கு ஆளுநர் நிபந்தனையின்றி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்று நான் முதல்வராக இருந்தபோது, புதுவையில் இருந்த துணை ஆளுநர் கிரண்பேடி மத்தியில் உள்ள மோடி, அமித்ஷாவின் உத்தரவின்பேரில் எங்களின் அரசுக்கு தொல்லை கொடுத்தார். இதே நிலையை தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக ஆட்சிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.

அரசுக்கு எதிர்மறையான கருத்துக்களை பொது மேடையில் பேசுகிறார். தமிழக அரசை நேரடியாக விமர்சிக்கிறார். ஆளுநர் ரவி எல்லை மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமிழக அரசுக்கும், ஆளும் திமுக ஆட்சிக்கும் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ரவியை ஊக்குவித்து இதுபோன்ற சட்டவிரோத, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான வேலைகளை செய்வதற்கு தூண்டி விடுகிறார்கள்.

மத்தியில் உள்ள மோடி அரசு ஜனநாயகத்தை மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடாக, இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக, மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆளுநர் ரவி செயல்பாடு நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது. உடனடியாக ஆளுநர் ரவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: