நாகர்கோவில்: ஏசி பெட்டிகள் இல்லாத அம்ரித் பாரத் ரயில் குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கம் தொடங்குகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர பயணத்திற்கான வசதியான, குளிர்சாதன வசதி இல்லாத, நவீன வசதிகளுடன் கூடிய ரயில் சேவை, ஒவ்வொரு பெட்டியிலும் சார்ஜிங் பாயிண்ட், உயர்தர இருக்கைகள், அவசர பிரேக் அமைப்பு, எல்இடி விளக்குகள், விசாலமான கழிப்பறைகள் போன்ற வசதிகள் அம்ரித் பாரத் ரயிலில் உள்ளன.
800 கி.மீ. வரை பயணிக்கும் நகரங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பயணிகளை கவரும் வண்ணம் நவீன தோற்றத்துடன் கூடிய ஜென்-இசட் வகை பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரூ.500-க்கு 1000 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யக்கூடிய வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏசி பெட்டிகள் இல்லை. இது குளிர்சாதன வசதி இல்லாத ரயிலாகும், இது பயணச் செலவைக் குறைக்கிறது. ஒரே நேரத்தில் அதிக பயணிகள் (சுமார் 1834 பேர் வரை) பயணிக்க முடியும்.
ஜென் – இசட் எனப்படும் புதிய தலைமுறை ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன, இது வேகமான இயக்கத்திற்கும், அதிக வசதிக்கும் உதவுகிறது. வரும் ஜனவரி 23ம் தேதி அன்று பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சியில், குறிப்பாக 4 ரயில்களை தொடங்கி வைக்கின்ற நிலையில் இதில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் முக்கிய ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
நாகர்கோவில் – மங்களூரு நவீன வசதிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் தொடக்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் – செர்லப்பள்ளி (ஹைதராபாத்) இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இது நாகர்கோவிலிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு நேரடி இணைப்பை வழங்கும். இவை தவிர, திருவனந்தபுரம் – தாம்பரம் மற்றும் திருவனந்தபுரம் – ஐதராபாத், கோயம்புத்தூர்-தன்பாத் ஆகிய வழித்தடங்களிலும் புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடங்கப்படுகின்றன.
