மகுட யோகம்!

மகுடம் என்பது ராஜ பதவியை குறிக்கும் அமைப்பாகும். ஒருவருக்கு ராஜ பதவிகள் கிடைக்க வேண்டுமெனில் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் வலிமைப் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு வலிமைப் பெற்ற கிரகங்கள்தான் ஆணையிடக்கூடிய அதிகார கிரகங்கள். இவை அதிகார அமைப்பினை பெற்று பதவிகளை தருகின்றன. இந்த அமைப்புகள் ஒவ்வொரு யோகத்திற்கு தகுந்தாற் போலவும் ஜாதகத்திற்கு மாறி வெவ்வேறு வகையான யோகத்தையும் பதவியையும் கொடுக்கும். அந்த வகையில் ஒவ்வொரு யோகத்திற்குள்ளும் மற்ற உப யோகங்கள் இருக்கும் அமைப்பாக இருக்கும். இந்த ராஜ யோகத்தினை அதாவது, ராஜ பதவியை தரக்கூடிய அமைப்பினை சுபத்தன்மை என்றும் அசுபத்தன்மை என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அசுபத் தன்மை உள்ள கிரகங்கள் யோகத்துடன் கர்மத்தையும் தருகின்றன. சுபத்தன்மை கொண்ட ராஜ கிரகங்கள் யோகத்துடன் சுபத்தன்மையை தருகின்றன என்பது யோகத்தின் சூட்சும அமைப்பாகும். அந்த வகையில் மகுட யோகம் என்ன தரும்.

மகுட யோகம் என்றால் என்ன?

ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் (9ம்) பாவகம், கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் (10ம்) பாவகம் ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் தரக் கூடியதாக மகுட யோகம் உள்ளது. மகுடம் என்ற சொல்லுக்கு கிரீடம் என்றும் பதவி என்றும் சொல்லலாம். இவற்றில் ஒன்பதாம் பாவகம் (9ம்) பாக்கியம் என்ற இறை ஸ்தானத்தை குறிப்பிடுகிறது. இதில் வியாழன் வலிமையுடன் இருப்பதும். பத்தாம் பாவகம் என்ற கர்ம ஸ்தானத்தில் (10ம்) சனி வலிமையுடன் இருப்பதும் மகுட யோகமாகும்.

மகுட யோகத்தின் சூட்சும வலிமை…

* இந்த மகுட யோகமானது மேஷ லக்னத்திற்கே அதிக பலன்களைத் தரக்கூடியதாக உள்ளது. காரணம், ஒன்பதாம் (9ம்) பாவகத்திற்குரிய வியாழன் ஆட்சி பெற்றும் பத்தாம் பாவகத்திற்குரிய (10ம்) சனி ஆட்சி பெற்றும் வலிமையான யோகப் பலனை செய்யும்.
* இந்த மேஷ லக்னத்திற்கு ஒன்பதாம் (9ம்), பத்தாம் (10ம்) அதிபதிகள் ஆட்சி பெற்று காரகோ பாவக நாஸ்தி என்ற பலனையும் செய்யும்.
* இந்த யோகத்திற்குள் சில யோகங்களும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தர்மகர்மாதிபதி யோகமும் கர்ம யோகம் இயங்கும் தன்மையுடன் இருக்கும்.
*லக்னத்திற்கு யோகத்தை செய்யக் கூடிய கிரகங்கள் ஒன்றாவது இருந்தால், நல்ல யோகப்பலனை தரும். இதில், மேஷ லக்னத்திற்கு யோகக்காரகன் வியாழன் கண்டிப்பாக யோகப் பலனை செய்வான். சனி என்பவன் பாதகாதிபதியாக வருகிறார். ஆகவே, யோகத்துடன் சில பாதகங்களையும் செய்வான்.
* வாழ்வு என்பது நன்மை, தீமை என்பதை கலந்ததாகவே உள்ளது. நன்மை நடக்கும் பொழுது எந்தப் பிரச்னையும் இல்லை. தீமை நடக்கும் பொழுது நாம் பரிதவித்துப் போகின்றோம். தீமையை குறைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதே உண்மை.

மகுட யோகத்தின் பலன்கள்

* ஒன்பதாம் (9ம்), பத்தாம் (10ம்) அதிபதிகள் வலிமை பெறுவதனால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். இதனால், ஏராளமான தானம், தர்மங்கள் செய்யக்கூடிய அளவில் பதவி பெறும் யோகத்தையும் கோயில், குளங்கள் போன்றவைகளுக்கு செலவு செய்யக்கூடிய அமைப்பையும் உண்டாக்கும்.
* அரசு மற்றும் அரசியல் தொடர்பான பதவிகள் இவர்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
*சமூகத்தில் நல்ல மரியாதை உள்ள பெரிய மனிதராக இருப்பார். மக்கள் மத்தியில் நல்ல அந்தஸ்து உள்ளவராக இருப்பார்.

* தலைமை பதவிக்களுக்கான நிர்வாகம் மற்றும் செயல்திறன் உடையவராக திகழ்வார்.
* பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்தவராக இருப்பார். அரசாங்கம் தொடர்பான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றவர் ஆவார்.
* வியாழன் வலிமையாக இருப்பதனால், அமைச்சர் இணையான பதவிகளையோ அல்லது அமைச்சராகும் வாய்ப்பையும் பெறுவார்.
*வீடு, வாகனங்கள், நிலம் ஆகியவற்றை பெற்று பெரிய வளர்ச்சியை அடைவார்.
*கடினமான உழைக்கும் திறன் உடையவராகவும், உண்டாகும் சிற்சில பிரச்னைகளையும் உடனுக்குடன் தீர்க்கும் திறன் படைத்தவராகவும் இருப்பார்.

மகுட யோகம் சிறக்க என்ன செய்யலாம்?

* முன்னோர்களுக்கு செய்யக்கூடிய சிரார்த்தங்கள் தவறாமல் செய்வது உங்களுக்கு பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
* தவறாமல் குலதெய்வ வழிபாட்டினை செய்வது அவசியமாகும். மேலும், குலதெய்வத்தினை தெரியாமல் இருந்தாலும் குலதெய்வத்தை தவறவிட்டிருந்தாலும் அதற்குரிய வழிமுறை களில் கண்டறிந்து வழிபாட்டினை தொடர்வது அவசியமாகும்.
* தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து, இனிப்பான நெய்வேத்தியம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
* ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோ பத்து வருடங்களுக்கு ஒரு முறையோ கோ தானம் வழங்குவது நன்மை பயக்கும்.
* சனிக்கிழமை ேதாறும் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்குவது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

 

Related Stories: