ரெட்டியார்சத்திரம், ஜன. 20: ரெட்டியார்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினாருக்கு பகுதியில் வெயிலடிச்சான்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் ராஜேந்திரன், முத்துசாமி, காவலர் தீபா ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் (54) என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரது பையை சோதனை நடத்தியதில் அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியம்மாளை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரெட்டியார்சத்திரம் போலீஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
