மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

 

மேல்மலையனூர், ஜன. 20: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் தலமாகும். இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்லும் நிலையில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வந்து அம்மன் அருளை பெற்று செல்கின்றனர்.
தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின் பல வகையான மலர்கள் பட்டாடை மற்றும் மூலவர் அங்காளம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தும் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு  ராஜராஜேஸ்வரி அலங்காரமும் செய்யப்பட்டது. அதன் பின் பல வகையான பழங்கள், சுண்டல், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நெய்வேத்தியங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நீண்ட நெடு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 10.30 மணிக்கு மேல் பிரத்தியேகமாக பல வகையான காய்கறிகள் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தோளில் சுமந்து வந்து அமர்த்தி தாலாட்டு பாடல் பாடினர். அச்சமயம் எதிரே கூடியிருந்த பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அம்மனை மனமுருகி வேண்டினர்.சிறப்பு வாய்ந்த தை அமாவாசை நாளில் பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஊஞ்சல் உற்சவத்தை காண பக்தர்கள் காலை முதலே மேல்மலையனூரில் குவிந்த வண்ணம் இருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் உதவி ஆணையர் (பொ) சக்திவேல் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ) ஏழுமலை மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: